Published : 18 Sep 2019 12:08 PM
Last Updated : 18 Sep 2019 12:08 PM

12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா

தினேஷ் மோங்கியா : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி


12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றுநிலையில், அனைத்துவகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் மோங்கியா அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2003-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது. அப்போது இந்திய அணியில் விவிஎஸ் லட்சுமணுக்கு பதிலாக தினேஷ் மோங்கியா சேர்க்கப்பட்டு இருந்தார்.

பஞ்சாபைச் சேர்ந்த தினேஷ் மோங்கியா கடந்த 1995-96-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போட்டிகளில்விளையாடி வருகிறார். இடதுகை பேட்ஸ்மேனான தினேஷ் மோங்கியாவின் பேட்டிங் ஸ்டையிலும், சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் செய்யும் முறையும் ஏறக்குறைய ஒரேமாதிரியாக இருக்கும் என்றுரசிகர்களால் வர்ணிக்கப்பட்டது.

இடதுகை சுழற்பந்துவீச்சிலும் தினேஷ் மோங்கியா அவ்வப்போது பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு புனேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தினேஷ் மோங்கியா அறிமுகமானார். இதுவரை 57 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தினேஷ் மோங்கியா 1,230 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 159 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம், 4அரைசதங்களை தினேஷ் மோங்கியா அடித்துள்ளார்.இடதுகை சுழற்பந்துவீச்சாளரான தினேஷ் மோங்கியா, 57 போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு தாகாவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தினேஷ் மோங்கியா அறிமுகமாகி விளையாடினார். அதன்பின் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணியில் தினேஷ் மோங்கியாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்தின் லான்காஷ்சையர் அணிக்காக தினேஷ் மோங்கியா விளையாடினார். ஸ்டூவர்ட் லா விலகிக்கொண்டதையடுத்து, அவருக்கு பதிலாக தினேஷ் மோங்கியா சேர்க்கப்பட்டு ஒரு ஆண்டு முழுமையாக விளையாடினார்.

121 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் மோங்கியா 8,028 ரன்கள் குவித்துள்ளார், சராசரியாக 48.95 ரன்களும், அதிகபட்சமாக 308 ரன்களும் சேர்த்துள்ளார். 27 சதங்களும், 28 அரைசதங்களும் அடித்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 10 சதங்கள், 26 அரைசதங்கள் உள்பட 5535 ரன்களை தினேஷ் மோங்கியா குவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் நியூஸிலாந்து பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் மோங்கியா மோசமாக பேட் செய்ததால், அணியில் இருந்து 2005-ம் ஆண்டு நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரேஒரு டி20 போட்டியில் மட்டும் விளையாடிய தினேஷ் மோங்கியா 38 ரன்கள் சேர்த்ந்திருந்தார்.

பிசிசிஐக்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டியில் பங்கேற்று தினேஷ் மோங்கியா விளையாடினார். இதனால் ஆத்திரமடைந்த பிசிசிஐ அந்த தொடரில் பங்கேற்ற பல்வேறு வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.அதில் தினேஷ் மோங்கியாமீது நடவடிக்கை எடுத்தது. நீண்டகாலத்துக்குப்பின் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக தினேஷ் மோங்கியாவுக்கு பிசிசிஐ வாய்ப்பளித்தது.

இந்நிலையில் 12 ஆண்டுகளாக எந்தவிதமான பிரதான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த தினேஷ் மோங்கியா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது 42 வயதில் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x