

வங்கதேசத்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டெஸ்ட் போட்டியில் அதுவும் வங்கதேச மண்ணில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது, கேப்டன் ரஷீத் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தியது.
இந்த டெஸ்ட் போட்டியில் ரஷீத் கான் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு முதல் இன்னிங்சில் 51 ரன்களை அதிரடி முறையில் விளாசியதும் ஆப்கன் வெற்றியில் முக்கியப் பங்களித்தது.
ஜிம்பாப்வேயின் அப்போதைய கேப்டன் ததேந்தா தைபூ மே, 2004-ல் தன் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்ற போது இளம் வயதில் டெஸ்ட் போட்டியில் வென்றவர் ஆனார்.
ஆனால் அப்போதைய தைபூவின் வயதைக் காட்டிலும் 8 நாட்கள் இளையவர் என்ற வகையில் ரஷீத் கான் சாதனையை முறியடித்தார்.
தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்துக்கும், ஆப்கான் நடப்பு கேப்டன் ரஷீத் கானுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. கிரேம் ஸ்மித் தன் முதல் டெஸ்ட் வெற்றியை வங்கதேச அணிக்கு எதிராகத்தான் சிட்டகாங்கில் (இப்போது சட்டோகிராம் என்று அழைக்கப்படுகிறது) ஈட்டினார், ஆனால் அவருக்கு அப்போது வயது 22. அப்போது ஸ்மித் தான் இளம் கேப்டன் என்ற சாதனையை வைத்திருந்தார்.
இந்நிலையில் ததேந்தா தைபு, கிரேம் ஸ்மித் சாதனைகளை முறியடித்து ரஷீத் கான் சாதனை புரிந்துள்ளார்.