

ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றிருக்க வேண்டும், ஆனால் பென் ஸ்டோக்ஸ் அடித்த அந்த கிரிக்கெட் யுகாந்திர சதம் (135 நாட் அவுட்) இங்கிலாந்துக்கு ஒரு அரிய வெற்றியைப் பெற்றுத் தந்த இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி ஏகப்பட்ட தவறுகளைச் செய்தது.
வெளியே சென்ற ஒரு பந்துக்கு ஹேசில்வுட் ஓவரில் எல்.பி. கொடுக்கவில்லை என்பதற்காக ரிவியூ செய்தனர், ஆனால் பந்து நேரலையிலேயே வெளியே சென்றது தெரிந்தும் டிம் பெய்ன் ரிவியூ செய்தார்.
இதனால் பென் ஸ்டோக்ஸ், நேதன் லயன் பந்தில் ஸ்வீப் ஷாட்டைக் கோட்டை விட்டு நேராக கால்காப்பில் வாங்க நடுவர் தவறாக நாட் அவுட் என்று கூற ஆஸ்திரேலியா ரிவியூ தீர்ந்து போனதால் ரீப்ளே கேட்க முடியாமல் பென் ஸ்டோக்ஸ் தப்பி வெற்றியைச் சாதித்தார்.
அனைத்தையும் விட மிகப்பெரிய தவறை நேதன் லயன் செய்தார், அவர் இரவு படுக்கும் போதெல்லாம் அது அவரது மனக்காட்சிகளில் வந்து அவரை பயமுறுத்தவே செய்யும்.
ஜாக் லீச் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவர் ஸ்ட்ரைக்கையும் பென் ஸ்டோக்ஸுக்கு அளிக்க இல்லாத சிங்கிளுக்கு உயிரை வெறுத்து ஓடினார். பந்தை கமின்ஸ் எடுத்து பவுலர் லயனிடம் எறிய, சாதாரணமான த்ரோவையே தட்டி விட்டு லயன் மிகப்பெரிய வாழ்நாள் தவற்றைச் செய்தார், எளிதான ரன் அவுட், ஆஸி. வெற்றி, தொடர் வெற்றி எல்லாம் பறிபோயின.
இந்நிலையில் அடுத்த ஆஷஸ் தொடரில் ஜாக் லீச் இருப்பாரோ மாட்டரோ ஆனால் இங்கிலாந்து ரசிகர்களின் ஆஸி.வீரர்களின் மனம் கவர்ந்த ஒரு வீரராக கண்ணாடிக்கார ஜாக் லீச் திகழ்ந்தார்.
இவர் ஆஸி. ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நேதன் லயன் ரன் அவுட் விட்ட தருணத்தை நினைவு கூர்ந்து ஜாலியாகக் கூறும்போது,
“நேதன் லயன் என்னிடம் வந்து நீ எனக்கு எவ்வளவு பியர்கள் கடன்பட்டிருக்கிறாய் தெரியுமா? என்றார், ஆம் உண்மையில் அவருக்கு ஏகப்பட்டது கடன் பட்டிருக்கிறேன்” என்றார் ஜாக் லீச்.
அந்த 76 ரன்கள் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து கற்பனையில் பிரமாதமான ஒரு தருணமாக நிரந்தர இடம்பிடித்திருக்கும். ஆனால் லயனுக்கு...?