Published : 17 Sep 2019 03:20 PM
Last Updated : 17 Sep 2019 03:20 PM

அனைத்து வடிவங்களிலும் 3வது அதிவேக அதிரடி சதம்: ஸ்காட்லாந்து வீரர் முன்சே உடைத்த டி20 சாதனைகள்

அயர்லாந்தில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று பல சாதனைகளை உடைத்த போட்டியாக அமைந்தது.

டப்லின், மலஹைடில் நடைபெற்ற் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து அணியின் விட்டுவிடாமல் இலக்கை விரட்டியதில் 20 ஓவர்களில் 194/7 என்று போராடி 58 ரன்களில் தோல்வி தழுவியது.

இதில் ஸ்காட்லாந்து தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் 14 சிக்சர்களுடன் 127 ரன்களை விளாசித்தள்ளினார். முன்சே 41 பந்துகளில் சதம் கண்டது அனைத்து வடிவங்களிலும் 3வது அதிவிரைவு சதமாகும். இது அவரது சர்வதேச கிரிக்கெட் முதல் சதமும் ஆகும். மேலும் முன்சே அடித்த 14 சிக்சர்கள் 2வது இடத்தில் உள்ளது, முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சஸாய் 16 சிக்சர்களை அடித்து டி20 சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

நெதர்லாந்து பவுலர் மாக்ஸோ டவுட் வீசிய முதல் ஓவரில் காட்டடி தர்பாரை நிகழ்த்தினார். இதில் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என்று 32 ரன்களை விளாசினார், யுவராஜ் சிங் மட்டுமே ஒரே ஒவரில் 36 ரன்களை 6 சிக்சர்கள் மூலம் அதிகபட்சம் எடுத்து உலக சாதனையை வைத்துள்ளார்.

அதே போல் முதல் விக்கெட்டுக்காக ஜார்ஜ் முன்சேவும், கேப்டன் கொயெட்சரும் சேர்ந்து 15.1 ஓவர்களில் 200 ரன்களைச் சேர்த்தது இந்த வடிவத்தில் 3வது அதிகபட்ச தொடக்கக் கூட்டணி ஸ்கோராகும். கொயெட்சர் 50 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 89 ரன்களை விளாசினார். ஸ்காட்லாந்தின் 252 ரன்கள் டி20-யில் 6வது மிகப்பெரிய ஸ்கோராகும். முதல் விக்கெட்டுக்காக டி20யில் அதிக ரன்கள் சாதனை ஆப்கான் ஜோடி சஸாய், கனி ஜோடியிடம் உள்ளது, இவர்கள் 2019-ல் அயர்லாந்துக்கு எதிராக 236 ரன்களை முதல் விக்கெட்டுக்காக சேர்த்தனர், முன்னதாக ஏரோன் பிஞ்ச், ஷார்ட் ஆகிய ஆஸி. ஜோடியினர் 2018-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 223 ரன்கள் எடுத்திருந்தனர், தற்போது ஸ்காட்லாந்து முன்சே-கொயெட்சர் கூட்டணி 200 ரன்கள் சேர்த்து 3ம் இடத்தில் உள்ளனர்.

259 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து நெதர்லாந்து அணி இறங்கிய போது சடுதியில் 18/3 என்று சரிந்தது. ஆனால் கெப்டன் சீலர் 49 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 96 ரன்களை எடுத்து உணர்வுடன் இலக்கை விரட்டிப்பார்த்தார் ஆனால் முடியவில்லை.

ஆட்ட நாயகன் ஜார்ஜ் முன்சே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x