Published : 17 Sep 2019 12:01 PM
Last Updated : 17 Sep 2019 12:01 PM

பாகிஸ்தான் வீரர்களுக்கு இனி பிரியாணி, பர்கர், ஸ்வீட் கிடையாது: புதிய பயிற்சியாளர் அதிரடி

பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் : கோப்புப்படம்

லாகூர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் வகையில், பிரியாணி, ஸ்வீட், பர்கர் உள்ளிட்ட வகைகளுக்கு தடைவிதித்து புதிய பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கொட்டாவி விட்ட காட்சியும், முதல்நாள் இரவில் பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலுக்குச் சென்று பர்கர், பீட்சா சாப்பிட்டதும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது.

ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் கடந்த ஜூன் 16-ம் தேதி நடந்த ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்விக்குப்பின் பாகிஸ்தான் வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களையும், தனிப்பட்ட ரீதியிலும் வார்த்தைகளால் தாக்கினார்கள். அடுத்துவரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வென்றாலும், அந்த அணியால் அரையிறுதிக்குள் செல்ல முடியாமல் வெளியேறியது.

இதனிடையே பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்த்தர் நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளராகவும், தேர்வுக்குழுத் தலைவராகவும் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். பந்துவீச்சுப்பயிற்சியாளராக வக்கார் யூனுஸ் அமர்த்தப்பட்டார்.

பாகிஸ்தான் வீரர்கள் தொப்பையுடன் உடல்தகுதியின்றி இருப்பதைப் பார்த்த மிஸ்பா உல் ஹக் முதல்கட்டமாக வீரர்களின் உடற்தகுதிக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்துள்ளார்.

அதில் முதல்நடவடிக்கையாக பாகிஸ்தான் வீரர்கள் அனைவருக்கும் பிரியாணி, ஸ்வீட், அதிக எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸா, அதிக கொழுப்பு கொண்ட மாமிசங்கள் போன்றவற்றை சாப்பிட தடைசெய்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் சஜ் சதிக் ட்விட்டரில் கூறுகையில், " மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வந்தபின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு, அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய அணிக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் போட்டிகளிலும் நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளது வீரர்களுக்கு பிரியாணி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், அதிககொழுப்பு கொண்ட இறைச்சி போன்றவை வீரர்கள் சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

மிஸ்பா உல் ஹக் பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x