Published : 17 Sep 2019 08:33 AM
Last Updated : 17 Sep 2019 08:33 AM

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இந்திய வீரர்கள் நவீன், குர்பிரீத் ஏமாற்றம்

நூர்-சுல்தான்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.

கஜகஸ்தானில் உள்ள நூர்-சுல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைலில் 77 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் தனது 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள செர்பியாவின் விக்டர் நேம்ஸை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் பாதியில் 1-0 என குர்பிரீத் சிங் முன்னிலை பெற்றிருந்தார்.

ஆனால் பிற்பாதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார் விக்டர் நேம்ஸ். தொடர்ந்து 1:18 விநாடிகள் எஞ்சியிருந்த நிலையில் கடினமான போராட்டத்துக்கு இடையே குர்பிரீத் சிங்கை களத்தில் உள்ள வடடத்துக்கு வெளியே தள்ள முயன்றார் விக்டர் நேம்ஸ்.

அப்போது தனது கட்டுப்பாட்டை இழந்து வட்டத்துக்கு வெளியில் விக்டர் நேம்ஸ் விழுந்தார். அவர் மீது குர்பிரீத் சிங்கும் விழ வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் விக்டர் நேம்ஸ்க்கு ஒரு புள்ளியை நடுவர் வழங்க அவர் 2-1 என முன்னிலை பெற்றார். நடுவரின் முடிவை எதிர்த்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஹர் கோபிந்த் சிங் மேல்முறையீடு செய்தார்.

ஆனால் இது குர்பிரீத் சிங்குக்கு பாதகமாக அமைய மேலும் ஒரு புள்ளியை இழக்க நேரிட்டது. இதன் பின்னர் விக்டர் நேம்ஸ் புள்ளிகளை விட்டுக்கொடுக்காமல் விளையாடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். விக்டர் நேம்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி னால் குர்பிரீத் சிங், வெண்கலப் பதக்கத்துக்கான ரெப்பேஜ் சுற்றில் விளையாடலாம் என்ற சூழ்நிலை இருந்தது.

ஆனால் விக்டர் நேம்ஸ் கால் இறுதி சுற்றில், கஜகஸ்தானின் அஸ்கட் தில்முகமடோவிடம் தோல்வியடைந்தார். இதனால் ரெப்பேஜ் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்து குர்பிரீத் சிங் தொடரில் இருந்து வெளியேறினார்.

ஆடவருக்கான கிரகோ ரோமன் 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மணீஷ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 0-10 என்ற கணக்கில் மால்டோவாவின் விக்டர் சியோபானுவிடம் தோல்வி யடைந்தார். முன்னதாக 2-வது சுற்றில் பின்லாந்தின் ஜோஹன்ஸை 11-3 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார் மணீஸ்.

விக்டர் சியோபானு கால் இறுதியில் ஜப்பானின் கெனிச்சிரோ புமிதாவிடம் தோல்வியடைந்ததால் ரெப்பேஜ் சுற்றில் விளையாடும் வாய்ப்பை மணீஷ் இழந்தார். 130 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நவீன் குமார், தகுதி சுற்றில் கியூபாவின் ஆஸ்கர் பினோவிடம் 0-9 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். எனினும் ஆஸ்கர் பினோ இறுதி சுற்றுக்கு முன்னேறியதால் ரெப்பேஜ் சுற்றில் விளையாடும் வாய்ப்பு நவீன் குமாருக்கு கிடைத்தது.

இந்த வாய்ப்பை நவீன் குமார் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். ரெப்பேஜ் சுற்றில் நவீன் குமார், எஸ்டோனியாவின் ஹெய்கி நபியிடம் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x