Published : 16 Sep 2019 03:48 PM
Last Updated : 16 Sep 2019 03:48 PM

சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ‘ரன் இயந்திரம்’ ஸ்டீவ் ஸ்மித்

லண்டன்,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நாயகன் ஸ்டீவ் ஸ்மித்.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்று நடந்து முடிந்து. ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து அணியும் தலா 2 வெற்றிகளைப் பெற்று ஒரு போட்டி சமனில் முடிந்ததால், ஆஷஸ் தொடர் சமனில் முடிந்தது. ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்குப்பின் ஆஷஸ் தொடர் சமனில் முடிந்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 399 ரன்கள் இலக்காகக் கொண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து 135 ரன்களில் தோல்வி அடைந்தது. இருப்பினும் கடந்த முறை சாம்பியன் என்பதால் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணியே கைப்பற்றியது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 4 போட்டிகளில் மட்டுமே களமிறங்கினார். இந்த 4 போட்டிகளிலும் 774 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்

இதற்கு முன் கடந்த 1971-ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு பயணித்த இந்திய அணியில் சுனில் கவாஸ்கரும் உடன் சென்றார். அப்போது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்காத சுனில் கவாஸ்கர், அடுத்த 4 டெஸ்ட் போட்டியில் களமிறங்கி 774 ரன்கள் சேர்த்தார். தான் அறிமுகான முதல் தொடரிலேயே கவாஸ்கர் 774 ரன் குவித்ததுதான் அவரை உலகறியச் செய்தது.

அதேபோல ஆஷஸ் தொடரிலும் 4 போட்டிகளில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 774 ரன்கள் சேர்த்து கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

4 போட்டிகளில் அதிக அளவு ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் உள்ளார். கடந்த 1976-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் ரிச்சர்ட்ஸ் 829 ரன்கள் குவித்தார்.

தற்போது 2-வது இடத்தில் சுனில் கவாஸ்கரும், ஸ்டீவ் ஸ்மித்தும் உள்ளனர். ஸ்மித் 700 ரன்களுக்கு மேல் அடிப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 2014-15-ம் ஆண்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரில் 769 ரன்கள் குவித்திருந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

அதேசமயம், 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச் 752 ரன்கள் குவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x