47 ஆண்டுகளுக்குப்பின் டிரா ஆன ஆஷஸ் டெஸ்ட்: 5-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி: கோப்பையை தக்கவைத்தது ஆஸி. 

ஆஷஸ் கோப்பையை தக்க வைத்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர் : படம் உதவி ட்விட்டர்
ஆஷஸ் கோப்பையை தக்க வைத்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர் : படம் உதவி ட்விட்டர்
Updated on
3 min read

லண்டன்


லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 135 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி.

இதன் மூலம் கடந்த 1972-ம் ஆண்டுக்குப்பின், ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2சமனில் முடிந்துள்ளது. கடந்த 1972-ம் ஆண்டிலும் 2-2 என்ற கணக்கில்தான் சமனில் தொடர் முடிந்தது.

இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதம் இருக்கும்போதே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 399 ரன்கள் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஷஸ் டெஸ்ட் தொடரும் அடங்கும். இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 வெற்றிகள் பெற்றதையடுத்து, தலா 48 புள்ளிகளும், ஒரு போட்டி சமனில் முடிந்ததால் தலா 8 புள்ளிகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் 56 புள்ளிகளுடன் 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.

இருப்பினும், கடந்த ஆஷஸ் தொடரின் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி என்பதால், கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்துக் கொண்டது. இந்த தொடரில் தொடர் நாயகன்களான இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கடைசி டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் 4 டெஸ்ட்களில் விளையாடி மொத்தம் 744 ரன்கள் குவித்து கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட அரைசதம், சதம் அடிக்கவில்லை. அவரின் அதிகபட்சமே 11 ரன்களாகவே இந்த தொடரில் இருந்தது. மொத்தம் 10 இன்னிங்ஸில் விளையாடிய டேவிட் வார்னர், அதில் 7 முறை ஸ்டூவர்ட் பிராட் வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்தது மிகப்பெரிய சோகமாகும். ஒவ்வொரு டெஸ்டிலும் டேவிட் வார்னரை சொல்லிவைத்து பிராட் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. ஆனால், ஆஸ்திரேலிய அணியில் மாத்யு வேட்(117) சதம் தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. அனைவரும் 25 ரன்களுக்குள்ளாகவே விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 263 ரனக்ளுக்கு ஆட்டமிழந்து, 135 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய அணியின் சரிவுக்கு இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், லீச் ஆகியோர் முக்கியக் காரணமாகி தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 225 ரன்களும் சேர்த்தனர். 69 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமழந்தது. இதையடுத்து, 399 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாக 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் சேர்த்திருந்தது. ஆர்ச்சர் 3 ரன்னிலும், லீச் 5 ரன்னிலும் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆர்ச்சர் 3 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சிலும், லீச் 9 ரன்னில் லயான் பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் 329 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

399 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னி்ங்ஸைத் தொடங்கியது. ஹேரிஸ், வார்னர் ஆட்டத்தைத் தொடங்கினர். ஹாரிஸின் துல்லியத்த்தன்மை மற்றும் ஸ்விங் பந்துவீ்ச்சை எதிர்கொள்ள இருவரும் கடுமையாகச் சிரமப்பட்டனர்.

பிராட் வீசிய 5-வது ஓவரில் ஹேரிஸ் 9 ரன்னில் போல்டாகினார். பிராட் வீசிய 7-வது ஓவரில் ஸ்லிப்பில் நின்றிருந்த பர்ன்ஸிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த தொடரில் 7-வது முறையாக பிராட் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு லாபுசாங்கேவும், ஸ்மித்தும் ஓரளவுக்கு நிலைத்தனர். ஆனால், லீச் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்னில் லாபுசாங்கே ஆட்டமிழந்தார். இந்த முறை ஸ்மித் மீண்டும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிராட் வீசிய பந்தில் லெக் கல்லி நின்றிருந்த பென் ஸ்டோக்ஸ் அருமையாக டைவ் அடித்து கேட்ச் பிடித்து ஸ்மித்தை 23 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்மித் ஆட்டமிழந்தவுடன் ஆஸ்திரேலிய பேட்டிங் ஆட்டம் கண்டது.
அதன்பின் வந்த வீரர்கள் அனைவரும் நிலைத்து பேட் செய்யவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டைகளை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பறிகொடுத்தனர்.

5-வது விக்கெட்டுக்கு மாத்யு வாட், மார்ஷ் கூட்டணி மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து 63 ரன்கள் சேர்த்தது. மார்ஷ் 24, பைன் 21, கம்மின்ஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபறம் சரிந்தாலும் நிலைத்து ஆடிய மாத்யு வாட் சதம் அடித்து 117 ரன்னில் வெளியேறினார். கடைசி இருவிக்கெட்டுகளான லயான், ஹேசல்வுட்டை லீச் ஆட்டமிழக்கச் செய்தார்.
77 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து 135 ரன்களில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், லீச் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்

போத்திராஜ்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in