Published : 16 Sep 2019 09:52 AM
Last Updated : 16 Sep 2019 09:52 AM

வியட்நாம் ஓபன் பாட்மிண்டன்: சவுரவ் வர்மா சாம்பியன்

ஹோ சி மின் சிட்டி

வியட்நாம் ஓபன் பிடபிள்யூஎப் டூர் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.

வியட்நாமின் ஹோ சி மின் சிட்டியில் இந்தப் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சவுரவ் வர்மாவும், சீன வீரர் சுன் பெய் ஜியாங்கும் மோதினர்.

இதில் சவுரவ் வர்மா 21-12 17-21 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் சுன் பெய் ஜியாங்கை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்.

முதல் செட்டை எளிதில் வென்ற சவுரவ் வர்மா, 2-வது செட்டில் போராடித் தோல்வி கண்டார். இதையடுத்து வெற்றிக்குத் தேவையான 3-வது செட்டில் சுதாரித்து விளையாடினார் சவுரவ். இதையடுத்து 3-வது செட்டை 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற பட்டத்தை கைப்பற்றினார் அவர்.

இந்த ஆண்டில் ஹைதராபாத் ஓபன், ஸ்லோவேனியன் ஓபன் ஆகிய சர்வதேச போட்டிகளில் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து சவுரவ் வர்மா கூறும்போது, “இந்தப் போட்டியில் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடரில் நான் சிறப்பாக விளையாடிய விதத்தில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த போட்டியின் 3 சுற்றுகளில் 3 ஜப்பான் வீரர்களுடன் இதுபோன்ற ஸ்டைலில் விளையாடினேன். பெரும்பாலும் தாக்குதல் ஆட்டத்தைக் கையிலெடுத்தேன். அவர்களை வென்றதில் மகிழ்ச்சி.

இறுதி சுற்று சற்று கடினமாக இருந்தது. ஆனாலும் என்னுடைய இயற்கையான விளையாட்டை வெளிப்படுத்தினேன். இந்தத் தொடரில் பட்டம் வென்றது எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அடுத்ததாக வரும் 24 முதல் கொரியா ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியிலும் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை,.” என்றார்.

உலக ஆடவர் பாட்மிண்டன் தரவரிசையில் 38-வது இடத்தில் சவுரவ் வர்மா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x