Published : 15 Sep 2019 07:02 PM
Last Updated : 15 Sep 2019 07:02 PM

ஸ்மித் ஆட்டமிழந்தார்: கடைசியில் சங்கக்காரா கூறிய  ‘பொறி’ உத்தியே பலன் அளித்தது 

ஓவல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஒருவழியாக ஸ்மித்தை சொற்ப ரன்களில் வீழ்த்துவதில் இங்கிலாந்து வெற்றி கண்டது, வெற்றி கண்ட பவுலர் பிராட். உத்தி வகுத்தவர் கேப்டன் ஜோ ரூட் மற்றும் பிராட்.

ஆம்! ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆஷஸ் தொடரின் குறைந்த ஸ்கோரான 23 ரன்களில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது, தொடரை 2-2 என்று சமன் செய்யும் அபார வாய்ப்பை இனி இங்கிலாந்த் தவறவிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

ஸ்டீவ் ஸ்மித் 2வது இன்னிங்சில் கடும் நெருக்கடியில் இறங்கினார். 4 பவுண்டரிகளுடன் 53 பந்துகளில் 23 என்று அவர் தன் வழக்கமான பாணியில் ஆடிவந்தார்.

இந்நிலையில் இன்னிங்சின் 27வது ஒவரை வீச வந்தார் பிராட். அதற்கு முன்பாக ஸ்மித்துக்கு பொறி வைக்க சங்கக்காரா கூறியது போல் ஒரு லெக் கல்லி, லெக் திசையில் டீப்பில் ஹூக் அல்லது புல்ஷாட்டுக்கு 2 பீல்டர்கள் என்று பொறிவைக்கப்பட்டது. சாதாரணமாக ஒரு பந்தை பிராட் ஃபுல் லெந்தில் வீச அதை லேசாக மட்டையினால் ஆன் திசையில் திருப்பி விட முயன்றார்.. லெக் கல்லியில் பென் ஸ்டோக்ஸ் இடது புறமாக டைவ் அடித்து அபார கேட்சைப் பிடித்தார். நல்ல வேளையாகப் பிடித்தார்.

ஸ்மித் 23 ரன்களில் இவ்வாறு சாதாரண பந்தில் ஆட்டமிழந்ததை இங்கிலாந்து நம்பமுடியாமல் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்தத் தொடரின் போது இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்காரா, ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த ஒரு ஆலோசனையை வழங்கினார். அதாவது ஒரு லெக் கல்லி, 2 பீல்டர்களை லெக் திசையில் டீப்பில் நிறுத்தி அவரை லெக் திசையில் பிளிக் ஆட வைத்து லெக் கல்லி கேட்சில் வீழ்த்தலாம் அல்லது தொடர் பவுன்சர்களில் ஏதாவது தவறு செய்து ஹூக் ஆடினால் பின்னால் கேட்ச் பிடிக்கப்படலாம் என்று கூறியிருந்தார்.

கடைசியில் மற்ற அனைத்து நிபுணர்களும் ஸ்மித்தை வீழ்த்த கூறிய ஆலோசனைகளை விட சங்கக்காரா கூறிய இந்த ஆலோசனைதான் ‘ஸ்பாட் ஆன்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படி துல்லியமாக அமைந்தது.

சற்றுமுன் வோக்ஸ் பந்தில் மிட்செல் மார்ஷும் காலியாகியிருப்பார், பர்ன்ஸ் எட்ஜை கேட்ச் எடுத்தார், ஆனால் வோக்ஸ் நோ-பால் வீசியதால் அது அவுட் ஆகவில்லை ஆஸ்திரேலியா 106/4. மேத்யூ வேட் 34 ரன்களுடனும் மார்ஷ் 6 ரன்களுடனும் ஆடிவருகின்றனர். ஸ்டூவர்ட் பிராட் அபாரமான ஸ்பெல்லில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x