

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று 312/8 என்று தொடங்கிய இங்கிலாந்து 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 399 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜோப்ரா ஆர்ச்சர் 3 ரன்களில் கமின்சிடமும், ஜாக் லீச் 9 ரன்களில் லயனிடமும் ஆட்டமிழக்க, பிராட் 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இங்கிலாந்து 329 ரன்களுக்கு தன் இரண்டாவது இன்னிங்சில் முடிந்தது.
இதனையடுத்து 399 ரன்கள் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் (11), மார்கஸ் ஹாரிஸ் (9) ஆகியோர் விக்கெட்டை பிராடிடம் இழந்து தற்போது 56/2 என்று ஆடி வருகிறது.
ஸ்மித் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுடனும் லபுஷேன் 14 ரன்களுடனும் ஆடி வந்தனர்.
இதில் வார்னர் விக்கெட்டை 7வது முறையாக பிராட் கைப்பற்றினார், இம்முறை இரட்டை இலக்கமான 11 ரன்களை எட்டிய வார்னர், பிராட் ரவுண்ட் த விக்கெட் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். இதன் மூலம் இந்தத் தொடரில் வார்னரின் ஸ்கோர்: 2,8,3,5,61,0,0,0,5,11 என்று உள்ளது. மொத்தமே வார்னர் 95 ரன்களை இந்தத் தொடரில் எடுத்து 9.5 என்ற சராசரியில் எடுத்து சொதப்பி விட்டார்.
சதங்களை எடுக்கும் ஒரு உலகின் சிறந்த தொடக்க வீரர் 5 டெஸ்ட் தொடரில் மொத்தமே சதம் எடுக்காமல் 95 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
இவருக்கு முன்னதாக சொதப்பி வரும் மற்றொரு தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் (9), பிராட் பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். ஆஃப் ஸ்டம்ப் பறந்து சில அடிகள் தள்ளிப்போய் விழுந்தது. சற்று முன் லபுஷேன் 14 ரன்களில் லீச்சிடம் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 61/3 என்று உள்ளது.
ஸ்மித் போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கும் நிலையில் இன்று மீதமிருக்கும் 66 ஓவர்களில் ஆஸ்திரேலியா கதை முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.