Published : 15 Sep 2019 10:30 AM
Last Updated : 15 Sep 2019 10:30 AM

ஆஷஸ் ஓவல் டெஸ்ட்: டென்லி, ஸ்டோக்ஸ் கூட்டணியில் வலுவான நிலையில் இங்கிலாந்து - 313/8

ஜோ டென்லி.

ஜோ டென்லியின் அருமையான பேட்டிங்கினால் (94) இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் முடிவில் 313/8 என்று மொத்த முன்னிலை 382 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது.

இந்தத் தொடரை ஆஸ்திரேலியா வெல்லாமல் இருக்க இங்கிலாந்து வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் உள்ளது, தொடரை 2-2 என்று சமன் செய்ய அருமையான வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளது.

ஜோ டென்லி ஆஸியின் அத்தனை ஆக்ரோஷத்தையும் சுவர் போல் தாங்கி 94 ரன்களை எடுத்து தன் முதல் டெஸ்ட் சதத்திற்கு 6 ரன்கள் இருக்கும் போது பீட்டர் சிடில் பந்தில் எட்ஜ் செய்து ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்காக பென் ஸ்டோக்ஸ் (67), ஜோ டென்லி இணைந்து 127 ரன்களைச் சேர்த்ததுதான் இங்கிலாந்தின் வலுவான நிலைக்கு அடித்தளமாகும். கடைசியில் ஜோஸ் பட்லர் ஆக்ரோஷமாக ஆடி 63 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார் இங்கிலாந்து 313/8.

ஆஸ்திரேலியா தரப்பிலும் வாய்ப்புகள் நழுவ விடப்பட்டன. ஜோ டென்லி, பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோரை வீழ்த்த வேண்டியா வாய்ப்புகளை நழுவ விட்டனர். ஸ்டோக்ஸ் 7 ரன்களில் இருந்த போது ஸ்டீவ் ஸ்மித் கேட்சை விட்டார். நேதன் லயன் வெறுப்படைந்தார். டென்லி 59 ரன்களில் இருந்த போதும் பட்லர் 19 ரன்களில் இருந்த போதும் பிளம்ப் எல்.பி. ஆகினர். நடுவர் நாட் அவுட் கொடுக்க ரிவியூ செய்யாமல் விட்டார் டிம் பெய்ன், மீண்டும் ஒரு மோசமான முடிவாக இது பெய்னுக்கு அமைந்தது.

கடைசி செஷனில் மட்டும் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது. இதில் 2 விக்கெட்டுகள் அடுத்தடுத்த பந்துகளில் விழுந்தது. 2 அபாரமான கேட்ச்கள் இந்த 6 விக்கெட்டுகளில் அடங்கும் கிறிஸ் வோக்ஸ் (6) கொடுத்த கேட்சை ஸ்டீவ் ஸ்மித் வலது புறம் டைவ் அடித்து பிரமாதமாக பிடித்தார். பட்லர் புல் ஷாட் டாப் எட்ஜ் எடுக்க ஸ்கொயர் லெக்கில் லபுஷேன் முன்னால் டைவ் அடித்து அபாரமான கேட்சை எடுத்தார்.

காலை செஷனில் நேதன் லயன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரோரி பர்ன்ஸ் 20 ரன்களில் கட் ஷாட் மட்டையின் அடிவிளிம்பில் பட்டுச் செல்ல டிம் பெய்ன் அருமையாகப் பிடித்தார். பிறகு உணவு இடைவேளைக்கு முன் கேப்டன் ஜோ ரூட் (21) லயன் பந்தை ஸ்லிப்பில் ஸ்மித்திடம் எட்ஜ் செய்தார்.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ் ஆஸி. பந்து வீச்சை அருமையாக ஆடினர், இருவரும் அரைசதம் கடந்தனர், அந்த செஷன் முதல் விக்கெட் விழவில்லை. ஸ்டோக்ஸ், லபுஷேன் வீசிய ஒரு மோசமான பந்தை சிக்சருக்குத் தூக்கி அரைசதம் கண்டார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு லயன் வீசிய அருமையான பந்துக்கு ஸ்டோக்ஸ் வெளியேறினார். டென்லி, சிடில் பந்தை எட்ஜ் செய்து சதத்திற்கு 6 ரன்கள் இருக்கும் போது வெளியேறினார். சிடில் இவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

ஜானி பேர்ஸ்டோ (14) சாம் கரண் (17) ஸ்கோரர்களுக்கு அதிக தொல்லை கொடுக்காமல் வெளியேறினர். பட்லர் ஆக்ரோஷமாக ஆடி இங்கிலாந்தை 300 ரன்களைக் கடக்கச் செய்தார்.

இன்று 4ம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து 313/8 என்று தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x