

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய மிடில் ஆர்டர் வலுப்பெற்றதால் நுழைக்க முடியாத ரோஹித் சர்மாவை வேறு வழியின்றி தொடக்க வீரராக அணியில் சேர்க்க நேரிட்டதை பலரும் ‘புதிய முயற்சி’ என்று பாராட்டி வருகின்றனர்.
சேவாக்குடன் ரோஹித் சர்மாவை ஒப்பிடுவது போன்ற அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது காரணம், சேவாக் மனத்தடையற்ற ஒரு வீரர், பந்தைப் பார் அடி என்ற வகையைச் சேர்ந்தவர் என்பதோடு கவாஸ்கர் ஒருமுறை அவரைப் பற்றி கூறியதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது, “சேவாக் வலைப்பயிற்சியில் முழுதும் தடுப்பாட்ட உத்தியையே பயன்படுத்துவார்” என்றார்.
இது போக 2008 தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சேவாக் 155 ரன்களை எடுத்த இன்னிங்சில் ஒரு 2 மணி நேர ஆட்டத்தில் பவுண்டரி எதையும் அடிக்காமல் ஆடினார். மேலும் உத்தி ரீதியாக சேவாக் நேர் மட்டையைக் கொண்டு ஆடுபவர், கை, கண் ஒருங்கிணைப்பு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் அவருக்கு. சச்சினை விடவுமே சேவாக் நேர் மட்டையைப் பயன்படுத்தி ஆடக்கூடியவர். பெரிய பெரிய இன்னிங்ஸ்களை ஆடக்கூடியவர். 2 முறை 300 ரன்களைக் கடந்தவர், ஒருமுறை 293 ரன்கள் வரை வந்தவர். தொடக்கத்தில் இறங்கி தனிமனிதராக புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸிடம் நட்சத்திர பட்டாளம் பல்லிளிக்க இவர் மட்டும் ஒரு முனையில் நின்று இரட்டைச் சதம் விளாசி கடைசி வரை வீழ்த்த முடியாத வீரராகத் திகழ்ந்தார். ஆகவே சேவாகுடன் இவரை ஒப்பிடுவது தவறு.
மேலும் சமீபத்தில் ஒருநாள் தொடக்க வீரரான ஜேசன் ராயை சேவாக் பாணியில் டெஸ்ட்டிலும் தொடக்க வீரராக இறக்கி இங்கிலாந்து அவரை மட்டையாக்கி விட்டது, இனி அவர் ஒருநாள் போட்டிகளிலும் கூட பழைய மாதிரி ஆட முடியுமா என்பது சந்தேகமே. அது போன்ற ஒரு நிலை ரோஹித் சர்மாவுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.
ரோஹித் சர்மாவை மிடில் ஆர்டரில் நுழைக்க முடியாமல் நாட்டில் பல தொழில்பூர்வ தொடக்க வீரர்கள் இருந்தும் கடும் ‘லாபி’ பேச ரோஹித் தொடக்க வீரராக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு தொடக்க வீரரான சஞ்சய் பாங்கர், ரோஹித்சர்மாவுக்கு காத்திருக்கும் சவால்களை பேசாமல் ரொமாண்டிக்காக ‘ரோஹித் வெற்றியடைந்து விட்டால் இதுவரை இந்திய அணி விரட்ட முடியாத இலக்குகளையும் விரட்டலாம்’ என்று கூறுகிறார். சரி இப்போதைய ‘ஜால்ரா’ கலாச்சாரம் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு சமூகத்தில் கிரிக்கெட்டில் மட்டும் நேர்மையான கருத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன?
இந்நிலையில் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
டெஸ்ட் அணியில் நிலைப்பெற்ற நடுவரிசை வீரர்கள் இருப்பதால் ரோஹித் சர்மாவை மிடில் ஆர்டரில் நுழைக்க முடியாது. எனவே தொடக்க வீரராக இறங்குவது அவருக்கு புதிய சவால். ஆனால் ஒரு சாதக நிலை என்னவெனில் சிகப்புப் பந்தில் தொடக்க வீரராக இறங்கும்போது களத்தில் நிறைய இடைவெளி இருக்கும். மேலும் மிடில் ஆர்டரில் அவர் களமிறங்குவதற்காகக் காத்திருக்க வேண்டும். இதனால் அவர் மனோசக்தி சேமிக்கப்படும்.
அவர் மட்டும் இதில் வெற்றியடைந்து விட்டால் அது அணிக்கு பெரிய அளவில் பயன்படும். கடந்த காலங்களில் சாதிக்க முடியாத மிகப்பெரிய இலக்கு விரட்டல்களையும் இந்திய அணி சாதிக்கும் வாய்ப்புள்ளது.
அவர் வெற்றியடைய வேண்டுமெனில் அவரது பாணி ஆட்டத்தை ஆட வேண்டும். அவரது தனித்தன்மையை விட்டுவிடக் கூடாது.
இவ்வாறு கூறினார் சஞ்சய் பாங்கர்.