Published : 14 Sep 2019 05:30 PM
Last Updated : 14 Sep 2019 05:30 PM

எப்போதும் இந்தியக் கிரிக்கெட்டின் நலன் பற்றிதான் தோனியின் சிந்தனை: விராட் கோலி புகழாரம் 

தரம்சலா

எப்போதும் இந்தியக் கிரிக்கெட்டின் நலன் பற்றிதான் தோனி சிந்தித்துக்கொண்டிருப்பார். மிகவும் மதிப்புமிக்க வீரர் தோனி என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி தரம்சலா நகரில் நாளை நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இருந்தே தோனியின் பேட்டிங் திறமை மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோனியின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதனால் உலகக்கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் பயணத்தில் இருந்து தோனி தாமாக விலகிக்கொண்டார். இருமாதங்களாக ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனத்தைச் செலுத்திவரும் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை டி20 போட்டிக்கு அணியைத் தேர்வு செய்யும் வகையில், இந்திய அணி தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனால்தான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாளை தொடங்க இருக்கும் டி20 தொடரில் இளம் வீரர்களுக்க அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நாளை தொடங்க இருக்கும் டி20 போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் தோனி குறித்து நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:

''இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக தோனி இன்னும் இருக்கிறார். இன்னும் அவர் விளையாடலாம். ஆனால், அணி நிர்வாகம் இளைஞர்களைக் குறிப்பாக ரிஷப் பந்த் போன்றோரை வளர்க்கும் முயற்சியில் இருக்கிறது.

தோனியைப் பற்றி பெருமையாகக் குறிப்பிடும் விஷயம் என்னவென்றால், இந்தியக் கிரிக்கெட்டின் நலனைப் பற்றிதான் தோனி சிந்திப்பார். கிரிக்கெட் அணி நிர்வாகம் என்ன சிந்திக்கிறதோ அதைத்தான் தோனியும் சிந்திப்பார். சிந்தனை ஒரேமாதிரிதான் இருக்கும்.

தோனி, தன்னைப் பற்றி தவறாகக் கணித்தவர்களின் எண்ணத்தை மாற்றியமைத்தவர். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது. ஏராளமான நேரங்களில் மக்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் தவறான நம்பிக்கை, சிந்தனை அனைத்தையும் தவறு என்று பலமுறை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி நிரூபித்துள்ளார். தோனி தொடர்ந்து விளையாடலாம். மிகவும் மதிப்புமிக்க வீரராகவே தோனி இன்னும் இருக்கிறார் " எனத் தெரிவித்தார்

தோனியின் ஓய்வு குறித்து நிருபர்கள் கேட்டபோது அதற்கு கோலி அளித்த பதிலில், "ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவது என்பது அவரின் சுய விருப்பம். இதில் மற்றவர்கள் ஏதும் சொல்லவதற்கில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x