Published : 14 Sep 2019 09:22 AM
Last Updated : 14 Sep 2019 09:22 AM

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் இன்று தொடக்கம்: பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் மீது எதிர்பார்ப்பு

நூர்-சுல்தான்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் கஜகஸ்தான் தலைநகரான நூர் சுல்தானில் இன்று தொடங்குகிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரானது டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிச் சுற்றாகவும் அமைந்துள்ளதால் இந்தியாவின் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

65 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கும் பஜ்ரங்புனியா இந்த சீசனில் பங்கேற்ற 4 போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். உலக தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் பஜ்ரங் புனியா தற்போது உச்சகட்ட பார்மில் உள்ளார். எனினும் கால்களை தற்காத்து கொள்ளும் யுத்தியில் அவர், எதிரணி வீரர்களால் சோதனைக்கு உட்படுத்தபடக்கூடும்.

கடந்த 2010-ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சுஷில் குமார் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார். ஃப்ரீஸ்டைல் பிரிவில் இதுவரை இந்தியா சார்பில் வெல்லப்பட்ட தங்கப் பதக்கம் இது ஒன்று மட்டும்தான். 25 வயதான பஜ்ரங் புனியா கடந்த 2013-ம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், 2018-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினார்.

இம்முறை அவர், அதீத பார்மில் இருப்பதால் தங்கப் பதக்கம் வெல்லக்கூடும் என கருதப்படுகிறது. பஜ்ரங் புனியாவுக்கு ரஷ்யாவின் காட்ஜிமுராட் ரஷிடோவ், பஹ்ரைனின் ஹாஜி முகமது அலி ஆகியோர் கடும் சவால் அளிக்கக்கூடும்.

மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் போட்டியில் களமிறங்கும் நட்சத்திர வீராங்கனையான வினேஷ் போகத் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. 53 கிலோ எடைப் பிரிவில் இருந்து 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறியுள்ள அவர், இந்த சீசனில் 5 போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி 3 தங்கம் வென்றுள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இதுவரை இந்திய வீராங்கனை யாரும் தங்கப் பதக்கம் வென்றதில்லை. இந்த பதக்க வறட்சிக்கு வினேஷ் போகத் இம்முறை முடிவு கட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றசுஷில்குமார் 8 வருடங்களுக்குப் பிறகு களமிறங்குகிறார். 74 கிலோ எடைப் பிரிவில் களமிறங்க உள்ள அவர், தனது வாய்ப்பை இறுக பற்றிக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். எனினும் அது அவ்வளவு எளிதான
தாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில்இந்த பிரிவில் லண்டன் ஒலிம்பிக் மற்றும் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள அமெரிக்காவின் ஜோர்டான் பரோஸ், இத்தாலியின் பிரான்ங் சாமிஸோ, நடப்பு சாம்பியனானா ரஷ்யாவின் சாய்டகோவ்,
உஸ்பெகிஸ்தானின் பெக்ஸோட் அப்துரகமோனோவ், துருக்கியின் சோனர் டெமிட்ராஸ் ஆகியோர் வலுவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக சுஷில் குமார் கடுமையாக போராட வேண்டியதிருக்கும்.

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்கைப்பற்றிய சாக் ஷி மாலிக் சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் தடுமாறி வருகிறார்.
2017-ம் ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற பின்னர் சாக் ஷி மாலிக்கிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. இந்த சீசனில் பல்கேரியாவில் நடைபெற்ற தொடரில் அதிகபட்சமாக சாக் ஷி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

எனினும் இந்தத் தொடரில், உலக சாம்பியனான பின்லாந்தின் பெட்ரா ஒல்லியை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் சாக் ஷி மாலிக் ஈர்த்திருந்தார். நெருக்கடியான தருணங்களை கையாள்வதில் சுணக்கம் அடைவது நீண்ட காலமாக சாக் ஷி மாலிக்குக்கு பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறது. மேலும் இறுதிக்கட்ட விநாடிகளில் அதிகளவிலான தற்காப்பு யுத்திகளை கையாள முயற்சிப்பதும் அவருக்கு முட்டுகட்டையாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் சாக் ஷி மாலிக் முத்திரை பதிக்க வாய்ப்பு உள்ளது.

68 கிலோ எடைப் பிரிவில் களமிறங்க உள்ள திவ்யா கரண் இந்த சீசனில் இரு தங்கம் மற்றும் பல்வேறு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். வலுவான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய அவர், பதக்க வேட்டை முனைப்புடன் உள்ளார். 59 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கும் பூஜா தண்டா, கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். இம்முறை அவரிடம் இருந்து மேம்பட்ட செயல்திறன் வெளியாகக்கூடும்.

ஆடவர் ஃப்ரீஸ்டைலில் 86 கிலோ எடைப் பிரிவில் களமிறங்க உள்ள தீபக் புனியா, ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நிலையில் தற்போது சீனியர் பிரிவில் களமிறங்குகிறார். 18 வருடங்களுக்குப் பிறகு ஜூனியர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த அவர், சீனியர் பிரிவில் நடைபெற்ற சோதனை போட்டிகளில் பல முன்னணி வீரர்களை விஞ்சி மிரளவைத்தார். இதனால் தனது அறிமுக தொடரிலேயே அவர் சாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரில் ஒவ்வொரு எடைப் பிரிவு பிரிவிலும் முதல் 6 இடங்களை பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதனால் இந்த உலக சாம்பியன்ஷிப் தொடர் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x