Published : 13 Sep 2019 07:40 PM
Last Updated : 13 Sep 2019 07:40 PM

ஓவல் டெஸ்ட்: லபுஷேன் ஆட்டமிழந்த அதே மாதிரியான ஆர்ச்சர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அபார ஸ்மித்

ஓவல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 294 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் தீப்பொறிப் பறக்க வீசி 3 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி சற்று முன் வரை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் டேவிட் வார்னர் கட் செய்ய முயன்று பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆகி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இன்னொரு தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 15 பந்துகளில் 10 பந்துகளையாவது தடவியிருப்பார், அவர் 3 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் பென் ஸ்டோக்ஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார், இந்தப் பந்து உள்ளே வந்து பிட்ச் ஆன பிறகு சற்றே வெளியே ஸ்விங் ஆக ஹாரிஸின் நிலையே மாறிப்போய் எட்ஜ் எடுத்தது.

ஸ்மித், லபுஷேன் இருவரும் இணைந்தனர். இருவரும் 69 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஸ்கோர் 83 ரன்களாக இருந்த போது லபுஷேன், ஆர்ச்சர் வீசிய ஃபுல் லெந்த் மிடில் ஸ்டமுக்கு பேக் அண்ட் அக்ராஸ் சென்றார் பந்து முழங்காலுக்குக் கீழே நேராக மிடில் ஸ்டம்பைப் பதம் பார்க்குமாறு கால்காப்பைத் தாக்கியது, பிளம்ப் அவுட்.

சில விநாடிகள் ரிவியூ செய்யலாமா என்று ஸ்மித்திடம் ஆலோசிக்க அவரோ வேண்டாம் என்று மறுக்க லபுஷேன் நேர் பந்தைக் கோட்டை விட்டு 10 பவுண்டரிகளுடன் எடுத்த 48 ரன்களுடன் வெளியேறினார்.

லபுஷேன் வெளியேறிய இடத்துக்கு மேத்யூ வேட் வந்தார். ஆர்ச்சரின் அடுத்த ஓவரில் ஸ்மித் ஒரு அபார பவுண்டரி அடித்தார். அதாவது லபுஷேன் பேக் அண்ட் அக்ராஸ் செல்வது போல்தானே ஸ்மித்தும் செல்கிறார் மிடில் ஸ்டம்பில் ஒரு ஃபுல் லெந்த் பந்தை வேகமாக வீசினால் ஸ்மித் விட்டு விடுவார் கால்காப்பில் படும் எல்.பி.ஆக்கலாம் என்ற பிரயாசையில் ஆர்ச்சர் அந்தப் பந்தை வீச, ஸ்மித் மிக அருமையாக நடு மட்டையில் படுமாறு ஒரு மாஸ்டர் பிளிக் ஷாட்டை அடிக்க ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு பந்து பறந்து நான்கு ரன்கள்.

அதாவது லபுஷேன் அவுட் ஆன அதே லெந்த், அதே திசைப் பந்து ஸ்மித் மட்டையிலிருந்து பவுண்டரிக்குப் பறந்தது.

பாண்டிங் கூறியது இதுதான் ஸ்மித் ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்கிறார் என்பதற்காக அவருக்கு நேராக வீசுவது அவர் விரித்த வலையில் விழுவதாகும், அந்தப் பந்து லெக் திசையில் பவுண்டரிக்குப் பறக்கும் என்றார். இந்த பாண்டிங்கின் ஆலோசனையை ஜோப்ரா ஆர்ச்சர் வாசிக்கவில்லை போலும்.

ஒரு பேட்ஸ்மென் அவுட் ஆகும் பந்து இன்னொரு பேட்ஸ்மென் மட்டையிலிருந்து நான்காக மாறுகிறது. இங்குதான் சாதாரண வீரர்களுக்கும் ஸ்மித், கோலி, வில்லியம்சன் போன்ற ஜீனியஸ் பேட்ஸ்மென்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு.

ஸ்மித் இந்தத் தொடரில் 700 ரன்களைக் கடந்து சென்று விட்டார், தற்போது 41 ரன்கள் எடுத்து அவர் இங்கிலாந்தை மீண்டும் படுத்தி எடுத்து வருகிறார், அச்சுறுத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x