Published : 13 Sep 2019 02:33 PM
Last Updated : 13 Sep 2019 02:33 PM

அசத்திய மிட்செல் மார்ஷ்;  ஜோ ரூட்டின் திணறலை மறைத்த அதிர்ஷ்டம்: முதல் நாளில் இங்கிலாந்து 271/8

ஓவலில் நடைபெற்று வரும் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் அதிர்ஷ்டம் கைகொடுக்க 57 ரன்களையும் பட்லர் 64 ரன்களுடனும் இங்கிலாந்து சிக்கலிலிருந்து சற்றே மீண்டது.

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியமளித்தது. ஜோட் டென்லி, ரோரி பேர்ன்ஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 27 ரன்களைச் சேர்த்த போது டென்லி தேவையில்லாமல் வெளியே சென்ற பந்தை ஆட முயன்று ஸ்மித்திடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இந்த 27 ரன்கள் தொடக்கக் கூட்டணிதான் இந்தத் தொடரில் இங்கிலாந்தின் அதிகபட்சமாகும்.

ரூட், ரோரி பர்ன்ஸ் ஜோடி இணைந்து போராடியது. கமின்ஸ், ஹேசில்வுட் பிரமாதமாக வீசி அசத்தினர். ஆனால் ஜோ ரூட் 2 ஆஃப் திசை பவுண்டரிகளுடன் அசத்தலாகத் தொடங்கினார். இதனையடுத்து ஷாட்களை ஆடுவதுதான் அங்கு இருப்பதற்கு தக்க வழி என்பதை உணர்ந்து ஆடிப்பார்த்தார்.... ஆனா முடியல.. நிறைய பந்துகள் சிக்காமல் மட்டையைக் கடந்து சென்றன, மட்டையின் உள்விளிம்பில் பட்டு படுத்தி எடுத்தன.

கமின்ஸ் என்றாலே ரூட்டுக்கு நடுக்கம் காண கமின்ஸ் பந்தில் அடுத்தடுத்து இரண்டு வாய்ப்புகளை வழங்கினார். 24 ரன்களில் இருந்த போது புல் ஷாட்டை காற்றில் ஆட அங்கு சிடில் சொதப்பினார் வாய்ப்பு நழுவல், அடுத்ததாக கமின்ஸ் ஒரு அபார பந்தில் ரூட்டின் மட்டை விளிம்பை சரியாகப் பிடித்தார், ஆனால் டிம் பெய்ன் அதனை வார்னர் தலைக்கு மேல் தட்டிவிட்டதுதான் நடந்தது பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒரு வாய்ப்பை நழுவ விட்டார். ரூட் அதிர்ஷ்டம் தொடர 7000 டெஸ்ட் ரன்களை எடுத்ததோடு 16வது ஆஷஸ் அரைசதம் கண்டார்.

141 பந்துகள் போராடி 57 ரன்கள் எடுத்த நிலையில் ஏற்கெனவே இவரது கால் நகர்த்தல்களின் போதாமையை சரியாகப் படம் பிடித்த கமின்ஸ், ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட்டில் வீழ்த்தியது போலவே சற்றே வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஒரு பந்தை காற்றில் உள்ளே செலுத்தி நல்ல லெந்தில் லேசாக நேர் படுத்தினார் ரூட்டின் ஆஃப் ஸ்டம்ப் காலியானது. அப்படியே ஒல்ட் ட்ராபர்ட் டெஸ்ட்டின் ஜெராக்ஸ் காப்பி. பார்க்க விளையாட முடியாத பந்து போல் தெரிந்தாலும் ரூட் இன்னும் கொஞ்சம் முன் காலை நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றாமல் இருக்காது. ரோரி பர்ன்ஸ் 47 ரன்களில் முன்னதாக ஹேசில்வுட்டிடம் விழ ஆஸ்திரேலியா 170/3 என்ற நிலையிலிருந்து மிட்செல் மார்ஷின் அருமையான ஸ்விங் பவுலிங்கிற்கு வீழ்ந்து 226/8 என்று ஆனது.

அதன் பிறகு பட்லர் இங்கிலாந்தை நகர்த்திக் கொண்டு சென்றார் பட்லர் இன்னிங்ஸில் மிக முக்கியமானது ஜோஷ் ஹேசில்வுட்டை இரண்டு ஸ்ட்ரெய்ட் சிக்சர்கள் அடித்ததே.

மிட்செல் மார்ஷ் தன்னைத் தேர்வு செய்ததை நியாயப்படுத்தினார், பென் ஸ்டோக்ஸை ஷார்ட் பிட்ச் பந்தில் காலி செய்தார், ஆனால் ஜானி பேர்ஸ்டோ, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டுகளை ஃபுல்லெந்த் மற்றும் யார்க்கர் லெந்த் பந்துகளில் காலி செய்தார். ஜோப்ரா ஆர்ச்சர் 9 ரன்களில் ஹேசில்வுட்டிடம் ஆட்டமிழக்க இங்கிலாந்து 226/8 என்று ஆனது, அதன் பிறகு பட்லர் (64 நாட் அவுட்), ஜாக் லீச் (10 நாட் அவுட்) ஆகியோர் மறுக்கட்டுமானம் செய்து 271/8 என்று முடித்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட், கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x