Published : 12 Sep 2019 05:29 PM
Last Updated : 12 Sep 2019 05:29 PM

தெ.ஆப்பிரிக்கத் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் முதல் முறையாக இடம் பெற்ற ஷுப்மான் கில்: ராகுல் வெளியேற்றம்

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக இளம் வீரர் ஷுப்மான் கில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அதேசமயம் மேற்கிந்தியத்தீவுகள் டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சொதப்பிய கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். மற்றவகையில் இந்திய அணியில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக ஆடிய அதே அணிதான் களமிறங்குகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் பேட்டிங்கில் சொதப்பிய கே.எல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கடந்த 30 இன்னிங்ஸ்களில் ராகுல் 664 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் அதிகபட்சமாக ஓவல் டெஸ்ட் போட்டியில் 149 ரன்கள் சேர்த்ததுதான் ராகுலின் அதிகபட்சமாகும்.

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரில் ராகுல் 4 இன்னிங்ஸ்களிலும் 44, 38, 13, 6 ஆகிய ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் டெஸ்ட் தொடரில் இருந்து ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமில்லாத டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி வென்றது. இந்த தொடரில் சிறப்பாகச் ஷுப்மான் கில் செயல்பட்டதால் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளார்.

இதனால் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுடன் சேர்ந்து ரோஹித் சர்மா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மேற்கி்ந்தியத்தீவுகள் தொடரில் ரோஹித் சர்மா இடம் பெற்றபோதிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் ராகுலுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது ராகுல் இல்லாத நிலையில் ரோஹித் சர்மாதான் ஆட்டத்தைத் தொடங்குவார்.

புஜாரா, விராட் கோலி அடுத்ததாக நடுவரிசையில் ரஹானே, ஹனுமா விஹாரி என பேட்டிங் வரிசை வலுவாகவே அமைந்துள்ளது.

3 டெஸ்ட் போட்டிகளும் உள்நாட்டில் நடப்பதால், அஸ்வின் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற அதிகமான வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பிங் பணிக்கு ஏற்கனவே விருதிமான் சாஹா, ரிஷப் பந்த் ஆகியோர் இருக்கின்றனர். இதில் ஷுப்மான் கில் வேறு இடம் பெற்றுள்ளார். ஆக இந்த தொடரில் 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஆகியோரும் சுழற்பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவும் இடம் பெற்றுள்ளார்கள்.

இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்) மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சட்டேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, சுப்மான் கில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x