இலங்கை அணிக்கு தீவிரவாத மிரட்டல்: பிரதமர் அலுவலக அறிவுறுத்தலால் பாகிஸ்தான் பயணம் ரத்தாகுமா?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கொழும்பு,

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு தீவிரவாத மிரட்டல் வந்திருப்பதால், பயணம் குறித்து மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் பயணத்தை இலங்கை அணி ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. இலங்கை அணி நிர்வாகம் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை அறிவித்த சில மணிநேரத்தில் இந்த மிரட்டல் வந்துள்ளது.

இலங்கை வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதிவரை பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. ஏற்கெனவே கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்தபோது, தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தால் அச்சமடைந்த இலங்கை அணியின் பிரதான 10 வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகிக் கொண்டனர்.

இந்த 10 வீரர்களிடம் இலங்கை வாரியம் பேச்சு நடத்தியும், அவர்கள் சம்மதிக்காததால் அவர்களுக்குப் பதிலாக 2-ம் தரமான அணியைத் தேர்வு செய்து பாகிஸ்தான் அனுப்ப இலங்கை நிர்வாகம் முடிவு செய்து அணியை அறிவித்தது.

இந்த சூழலில் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், பயணத்தை மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை பிரதமர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு வந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் என்று நம்பத்தகுந்த அளவில் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல்கள் வந்துள்ளன. ஆதலால், இலங்கை கிரிக்கெட் அணி அதிகமான அக்கறை எடுக்க வேண்டும். அங்கு சென்று விளையாடும் சூழலையும் மறு ஆய்வு செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் தங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை மறு ஆய்வு செய்து தீவிரப்படுத்த இலங்கை அரசு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளையும் இலங்கை வாரியம் அறிவித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டுக்கான கேப்டன் கருணாரத்னே மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக லாஹிரு திரிமானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணியின் கேப்டனாக டசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தொடருக்குச் செல்லாமல் திசாரா பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெலா, குஷால்பெரேரா, தனஞ்சயா டி சில்வா, அகிலா தனஞ்சயா, சாரங்கா லக்மால், தினேஷ் சந்திமால் ஆகியோர் விலகிக்கொண்டனர்.

ஒருநாள் அணி விவரம்

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருநாள் அணிக்கு கேப்டனாக லாகிரு திரிமானே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், குணதிலகா, சமரவிக்ரமா, அவிஷ்கா பெர்ணான்டோ, ஓஷாடா பெர்ணான்டோ, ஷீஹன் ஜெயசூர்யா, டசுன் ஷனகா, மினோத் பனுகா, ஏஞ்சலோ பெரேரா, வனின்டு ஹசரங்கா, லக்ஷன் சண்டகன், நுவான் பிரதீப், இசுரு உடானா, கசுன் ரஜிதா, ஹீருரு குமாரா ஆகியோர் உள்ளனர்

டி20 அணி விவரம்:

டசுன் ஷனகா(கேப்டன்), டனுஸ்கா குணதிலகா, சதீரா சமரவிக்ரமா, அவிஸ்கா பெர்ணான்டோ, ஓஷடா பெர்ணான்டோ, ஷீஹன் ஜெயசூர்யா, ஏஞ்சலோ பெரேரா, பனுகா ராஜபக்சே, மினோத் பனுகா, லாஹிரு மதுஷங்கா, வானின்டு ஹசரங்கா, லக்சன் சண்டகன், இசுரு உடானா, நுவான் பிரதீப், கசுன் ரஜிதா, லாஹிரு குமாரா.


ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in