Published : 11 Sep 2019 05:08 PM
Last Updated : 11 Sep 2019 05:08 PM

விராட் கோலியுடன் பிரச்சினை என்றால் ரோஹித் உலகக்கோப்பையில் 5 சதங்கள் எடுத்திருப்பாரா? - ரவிசாஸ்திரி கருத்து

இந்திய அணியில் கோஷ்டிப் பூசல் உள்ளது, ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன போன்ற செய்திகள் சுத்த ‘நான் - சென்ஸ்’ என்று தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமீபகாலங்களாக ரோஹித் சர்மாவுக்கும் கோலிக்கும் அணிக்குள் மோதல் போக்கு நிலவுவதாக ஊடகங்களில் சில பகுதிகள் விமர்சித்தும், எழுதியும் வந்தன, இதனை கோலியும் ரவிசாஸ்திரியும் பலமுறை மறுத்துள்ளனர். ஆனால் ரோஹித் சர்மா தரப்பிலிருந்து இது தொடர்பாக நேரடியாக எந்தப் பதிலும் அளித்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்னுமொரு மறுப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக நான் அணி வீரர்களுடன் ஓய்வறையில் இருந்து வருகிறேன். வீரர்கள் எப்படி விளையாடி வருகின்றனர், ஒருவருக்கொருவர் எப்படி ஆதரவாக இருக்கின்றனர், அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனவே இத்தகைய செய்திகள் சுத்தமாக அர்த்தமற்றவை. அப்படி தகராறு இருக்கிறது என்றால் ரோஹித் சர்மா ஏன் உலகக்கோப்பையில் 5 சதங்களை எடுக்க வேண்டும் அல்லது ரோஹித் சர்மா, கோலி பார்ட்னர்ஷிப்தான் நடந்திருக்குமா?

15 வீரர்கள் இருக்கும் ஓய்வறையில் கருத்துக்கள் மாறுபடும் அதுதான் தேவையும் கூட. அனைவரும் ஒரேமாதிரி யோசிப்பது சரியாக இருக்காது, பல கருத்துகள் இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் யாராவது ஒருவர் புதிய யோசனையை அளிப்பார்கள். இதை ஊக்குவிக்க வேண்டும்.

வீரர்கள் கருத்துகளை ஊக்குவித்து எது சிறந்ததோ அந்த முடிவை எடுக்க வேண்டும். சில சமயங்களில் அணியில் உள்ள ஜூனியர் வீரர் கூட எங்களுக்குத் தோன்றாத ஒரு ஐடியாவைப் பகிரலாம். எனவே இதையெல்லாம் போய் தகராறு, வேறுபாடு என்றேல்லாம் பார்க்கக் கூடாது.

இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x