பாக். தொடரை எங்கள் வீரர்கள் புறக்கணித்ததற்கு இந்தியா காரணமா?: இலங்கை அமைச்சர் விளக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி,

பாகிஸ்தான் தொடரை இலங்கை கிரிக்கெட் அணியின் 10 வீரர்கள் புறக்கணித்ததற்கு இந்தியா பின்புலத்தில் இருக்கிறதா என்பதற்கு இலங்கை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ விளக்கம் அளித்துள்ளார்.

வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை இலங்கை அணி பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டு இருந்தது. இதற்கான வீரர்களும் இலங்கை அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், திடீரென இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள 10 வீரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட முடியாது எனக் கூறி தொடரைப் புறக்கணித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்கெனவே பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியதை நினைவு கூர்ந்த வீரர்கள், இந்தத் தொடரில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் வீரர்களிடம் பேச்சு நடத்தியும், அவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்தப் பயணத்தில் இருந்து லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சுரங்கா லக்மல், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகியோர் விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் மறுத்ததற்கு இந்தியாதான் பின்புலத்தில் இருக்கிறது என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹசைன் சவுத்ரி குற்றம்சாட்டி இருந்தார்.

பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி ட்விட்டரில் கூறுகையில், "பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யாவிட்டால், ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்தியா மிரட்டியதால்தான் இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மறுத்துள்ளார். அவர் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கை வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் பயணித்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியிருப்பதில் இந்தியா எந்தவிதத்திலும் காரணம் இல்லை. அவ்வாறு கூறும் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. கடந்த 2009-ம் ஆண்டு தாக்குதலுக்குப்பின் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே வீரர்கள் விளையாடத் தயங்குகிறார்கள்.

அவர்களின் முடிவை மதிக்கும் விதமாக, தொடருக்கு வர விருப்பம் இருக்கும் வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய இருக்கிறோம். எங்களிடம் முழு வலிமையான அணி இருக்கிறது, பாகிஸ்தானை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது"

இவ்வாறு பெர்னான்டோ தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in