

பஸட்டெய்ரில் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் ஜமைக்கா அணி 20 ஒவர்களில் 241 ரன்கள் குவிக்க அதனை செயிண்ட் கிட்ஸ் அணி 18.5 ஓவரக்ளில் விரட்டி 242/6 என்று அபார வெற்றி பெற்றது.
ஜமைக்கா அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 116 ரன்களை எடுத்து தனது 22வது டி20 சதத்தை எடுத்தார். ஆனால் அவரது இன்னிங்ஸ் வெற்றியைக் கொடுக்க முடியவில்லை. ஜமைக்கா அணியின் சாத்விக் வால்டன் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 73 ரன்களை விளாச அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிய செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி 242/6 என்று அபார வெற்றியை ஈட்டியது. இது அனைத்து டி20 போட்டிகளிலும் இரண்டாவது மிகப்பெரிய விரட்டல் ஆகும் இது. மொத்தம் இந்தப் போட்டியில் 37 சிக்சர்கள் விளாசப்பட்டது, இதுவும் டி20 கிரிக்கெட்டின் சாதனை சமன் ஆகும்.
இலக்கை விரட்டும் போது எவின் லூயிஸ் 17 பந்துகளில் அரைசதம் கண்டு சிபிஎல் கிரிக்கெட்டின் அதிவேக அரைசத சாதனை படைத்தார்.
கிறிஸ் கெய்ல் இன்னிங்ஸைத் தொடங்கிய போது இடது கை ஸ்பின்னர் பேபியன் ஆலன் வீச முதல் 4 பந்துகளில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என்று கெய்ல் புறப்பட்டார். ஆனாலும் கார்லோஸ் பிராத்வெய்ட், வால்ட்டனுக்கு 6 டாட்பால்களை வீசிக் கட்டுப்படுத்தியதும் நடந்தது, ஆனால் லெக் ஸ்பின்னர் உசாமா மீர் ஓவரில் வால்ட்டன் இரண்டு நேர் சிக்சர்களை அடிக்க அந்த ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டது, கட்டுப்பாடு உடைக்கப்பட்டது.
அடுத்த ஓவரை உசாமா மீர் வீச கெய்ல் இம்முறை அவரைப் பதம் பார்க்க 15 ரன்கள் விளாசப்பட்டது. 11வது ஓவர் முதல் 16வது ஓவர் வரை ஜமைக்கா அணி ஆடிய ருத்ர தாண்டவத்தில் 13 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 82 ரன்கள் அடித்து நொறுக்கப்பட்டது. 17வது ஓவரில் கிறிஸ் கெய்ல் தனது 22வது சதத்தை எடுத்தார். கடைசி 10 ஒவர்களில் ஜமைக்கா 153 ரன்களை அடிக்க சிபிஎல் கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோரான 241 ரன்களை எட்டியது.
இலக்கை விரட்டிய போது டெவன் தாமஸ், எவின் லூயிஸ் தொடங்கினர். இதில் 18 பந்துகளில் லூயிஸ் 53 ரன்களை விளாசித்தள்ளினார். 5.3 ஒவர்களில் 85 ரன்கள் வந்த போது எவின் லூயிஸ் வெளியேறினார். பவர் ப்ளேயில் 89 என்று சிபிஎல் சாதனை படைக்கப்பட்டது.
டெவன் தாமஸ் (71), இவான்ஸ் (41) இணைந்து ஸ்கோரை 12வது ஓவர் முடிவில் 161 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். இவான்ஸ், தாமஸ் இருவரும் ஆட்டமிழக்க 14-ம் ஒவர் தொடக்கத்தில் ஸ்கோர் 176/3 என்று இருந்தது, ஆனால் ஒஷேன் தாமஸ் வேகத்தில் இதே ஓவரில் மேலும் 2 விக்கெட்டுகள் விழுந்தன. பிராத்வெய்ட், ஜேசன் முகமது ஆகியோர் டக் அவுட் ஆக கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது.
ஆனால் பேபியன் ஆலன் 15 பந்துகளில் 37 ரன்களையும் ஷமார் புரூக்ஸ் 15 பந்துகளில் 27 ரன்களையும் விளாச 18.5 ஓவர்களிலேயே 242/6 என்று வெற்றி பெற்றது செயிண்ட் கிட்ஸ் அணி. ஆட்ட நாயகன் எவின் லூயிஸ்.