இந்தியாவின் மிரட்டலுக்குப் பயந்து இலங்கை அணி வீரர்கள் பாக். வர மறுக்கிறார்கள்: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

இலங்கை அணி வீரர்கள்
இலங்கை அணி வீரர்கள்
Updated on
2 min read

இஸ்லாமாபாத்,

இந்தியாவின் மிரட்டலுக்குப் பயந்துதான் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள் என்று இந்தியா மீது பாகிஸ்தான் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை இலங்கை அணி பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டு இருந்தது. இதற்கான வீரர்களும் இலங்கை அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால், திடீரென இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள 10 வீரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட முடியாது எனக் கூறி தொடரைப் புறக்கணித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்கெனவே பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியதை நினைவு கூர்ந்த வீரர்கள், இந்தத் தொடரில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் வீரர்களிடம் பேச்சு நடத்தியும், அவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்தப் பயணத்தில் இருந்து லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகியோர் விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கை அணி பயணம் செய்தது. அப்போது கடாபி மைதானத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பேருந்தில் பயணித்தனர்.

அப்போது, வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது தலிபான் மற்றும் லஷ்கர் இ ஜான்வி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதை வீரர்கள் இன்னும் மறக்கவில்லை.

இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் மறுத்ததற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி ட்விட்டரில் கூறுகையில், "பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யாவிட்டால், ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்தியா மிரட்டியதால்தான் இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள் என்று தகவல் அறிந்த விளையாட்டுத் துறை வர்ணனனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது உண்மையில் மோசமான தந்திரவேலை. விளையாட்டில் இருந்து விண்வெளி வரை மூர்க்கத்தைக் காட்டுகிறார்கள். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்திய விளையாட்டுத் துறையின் சில அதிகாரிகள் செயல் மலிவாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in