Published : 10 Sep 2019 04:52 PM
Last Updated : 10 Sep 2019 04:52 PM

ராகுல் ஃபார்ம் கவலைக்கிடம்; ரோஹித்தை பரிசீலிக்கலாம்: பச்சைக் கொடி காட்டிய எம்.எஸ்.கே. பிரசாத்

புதுடெல்லி,

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவைக் களமிறக்குவது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் ராகுல் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டு இருந்த ரோஹித் சர்மாவுக்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு அளித்த போதிலும் அவர் 13, 6, 44, 38 ரன்கள் மட்டுமே சேர்த்து மோசமான பேட்டிங் ஃபார்மை நிரூபித்தார்.

வழக்கமாக ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் நடுவரிசையில் களமிறங்குவார். ஆனால், மே.இ.தீவுகள் தொடரில் ரோஹித் சர்மாவின் இடத்தை ஹனுமா விஹாரியும், ரஹானேயும் நிரப்பி எதிர்காலத்தில் நடுவரிசைக்கு சிறந்த வலுவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதனால், அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வரிசையில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்படுமா அல்லது ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா எனத் தெரியவில்லை.
இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது:

''இந்திய அணியின் தேர்வுக்குழு மே.இ.தீவுகள் தொடர் முடிந்த பின் பேசி இருக்கிறோம். அடுத்துவரும் தொடரில் உறுதியாக ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிப்போம். அப்போது ரோஹித் சர்மா குறித்துப் பேசுவோம்.

அதேசமயம், கே.எல். ராகுலும் மிகச்சிறந்த திறமை உடையவர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது கடினமான நேரமாக இருக்கிறது. அவரின் பேட்டிங் ஃபார்ம் இப்போது கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. அதிகமான நேரம் விக்கெட்டை நிலைப்படுத்தும் வகையில் ராகுல் விளையாட வேண்டும். தொடர்ந்து பேட்டிங்கில் பயிற்சி பெற வேண்டும்.

குல்தீப் யாதவ், மற்றும் யஜுவேந்திர சாஹல் இருவரையும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்குத் தயார் செய்யும் விதத்தில் இருக்கிறோம்.

சுழற்பந்துவீச்சில் புதுமைகளையும் புதிய வீரர்களையும் அறிமுகம் செய்யும் வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்''.

இவ்வாறு பிரசாத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x