இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் ஜெப்ஃரி பாய்காட், ஸ்ட்ராஸுக்கு நைட்ஹூட் விருது

ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், ஜெப்ரி பாய்காட்
ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், ஜெப்ரி பாய்காட்
Updated on
1 min read

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் ஜெப்ஃரி பாய்காட், ஆன்ட்ரூ ஸ்ட்ராஸுக்கு நைட்ஹூட் விருது வழங்கப்பட உள்ளது.

நைட்ஹூட் விருது பெற்றவர்களில் அரசியல், நிர்வாகம், தொழில்துறை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தவிர்த்து இரு விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த தெரஸா மே பிரக்ஸிட் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த முடியாத காரணத்தால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பிரதமராக இருந்தபோது, நைட்ஹூட் விருதுக்கான வீரர்களைத் தேர்வு செய்திருந்தார். அதில் தெரஸா மேக்கு மிகவும் விருப்பமான ஜெப்ஃரி பாய்காட் பெயருடன் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் பெயரும் இடம் பெற்றது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த ஸ்ட்ராஸ் 100 டெஸ்ட் போட்டிகளில் 2004 முதல் 2012-ம் ஆண்டுவரை விளையாடியுள்ளார். 7,037 ரன்களைக் குவித்து சராசரியாக 40.91 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து அணி இருமுறை ஆஷஸ் கோப்பையை வென்றபோது, அணியை வழிநடத்தியவர் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மிட்ல்செக்ஸ் அணியின் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக ஸ்ட்ராஸ் இருந்து வந்தார்.

ஸ்ட்ராஸ் தனது ஓய்வுக்குப் பின், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து, இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்லக் காரணமான தகுதியான வீரர்களைத் தேர்வு செய்தார். தனது மனைவி ருத் தொண்டைப் புற்றுநோயால் இறந்த பின் அவரின் பெயரில் ருத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார்.

அதேபோல இங்கிலாந்து அணியில் 1964 முதல் 1982-ம் ஆண்டு வரை இடம் பெற்று 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் பாய்காட். பாய்காட் இதுவரை 8,114 ரன்கள் சேர்த்துள்ளார், சராசரியாக 47.72 ரன்களை பாய்காட் வைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களைச் சேர்த்தவர் பாய்காட் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1978-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் பாய்காட் இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தனது முதல்தரப் போட்டியில் பாய்காட் 56.83 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதாவது 151 சதங்கள் உள்பட 48 ஆயிரம் ரன்களை பாய்காட் சேர்த்துள்ளார். இதில் 100-வது சதம் 1977-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பாய்காட் அடித்தார்.

தற்போது 78 வயதாகும் பாய்காட் தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in