Published : 10 Sep 2019 11:53 AM
Last Updated : 10 Sep 2019 11:53 AM

ஹோல்டர் நீக்கம்: மே.இ.தீவுகள் அணியின் ஒருநாள், டி20 அணியின் புதிய கேப்டன் நியமனம்

போர்ட் ஆப் ஸ்பெயின்,


மே.இ.தீவுகள் அணியின் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக மூத்த வீரர் கெய்ரன் பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்த ஜேஸன் ஹோல்டர், டி20 அணிக்குக் கேப்டனாக இருந்த பிராத்வெய்ட் ஆகியோர் நீக்கப்பட்டு பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஹோல்டர் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் கடந்த 3 ஆண்டுகளாக பொலார்ட் விளையாடாமல் இருந்த நிலையில், அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டித் தொடரிலும் பொலாட் அணியில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் இடம் பெறவில்லை.

உலகக் கோப்பைப் போட்டியில் ஹோல்டர் தலைமையில் வந்த மே.இ.தீவுகள் அணி மொத்தம் 9 போட்டிகளில் 2 ஆட்டங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து, அணியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும், முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும் எனும் நோக்கில் இந்த மாற்றத்தை செய்துள்ளனர்.

இதுகுறித்து மே.இ.தீவுகள் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறுகையில், " கடந்த தேர்வுக்குழுத் தலைவர் டேவ் கேமரூன் காலத்தில், பொலார்ட், டிவைன் ஸ்மித் ஆகியோர் கிரிக்கெட் வாழ்க்கை முடிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பிராவோ தனது ஓய்வை அறிவித்தார்.

அணியில் சரியான வீரர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் பொலார்டை தேர்வு செய்து உலகக் கோப்பைப் போட்டியின் போது ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் வைத்தோம் ஆனால் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இப்போது பொலார்டை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது அணிக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் " எனத் தெரிவித்தார்.

மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள கெய்ரன் பொலார்ட் கூறுகையில், " மே.இ.தீவுகள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கிறது, வாரிய இயக்குநர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு அணியைத் தயார் செய்யும் விதத்தில் இப்போது இருந்தே பணிகளைத் தொடங்குவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப்பின் ஒருநாள் அணியில் விளையாடமல் இருந்துவந்தார் பொலார்ட். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டும் அவர் விளையாடவில்லை, டி20 போட்டியில் 58, 8, 49 ரன்களைச் சேர்த்து முன்னணி ரன் சேர்ப்பாளராக பொலார்ட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x