

நியூயார்க்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 15-ம் நிலை வீராங்கனையான கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்குவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பியான்கா ஆண்ட்ரெஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் தனது நாட்டுக்காக முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று கொடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த் தினார் 19 வயதான பியான்கா ஆண்ட்ரெஸ்கு. மேலும் இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் பியான்கா ஆண்ட்ரெஸ்கு. கடந்த 2017-ம் ஆண்டு முதன் முறையாக விம்பிள்டனில் அறிமுகமான பியான்கா ஆண்ட்ரெஸ்கு முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
அதன் பின்னர் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் 2-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டிருந்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 2-வது சுற்றைக் கூட கடக்காத பியான்கா ஆண்ட்ரெஸ்கு இம்முறை வலுவான செரீனா வில்லியம்ஸை பந்தாடி பட்டம் வென்றது மைதானத்தில் குழுமியிருந்த 24 ஆயிரம் ரசிகர்களை வியக்க வைத்தது.
பியான்கா சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மார்கரெட் ஸ்மித் கோர்ட் டின் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் இருந்த செரீனா வில்லியம்ஸின் கனவு கலைந்தது. 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தன்வசம் வைத்துள்ள 37 வயதான செரீனா, கடந்த ஆண்டில் இருந்து 4-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார்.