

பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் அப்துல் காதிர் லாகூரில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 63.
வெள்ளிக்கிழமை இரவு பெரிய அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது.
இவருக்க்கு 4 மகன்கள் ஒரு மகள், இந்த மகள் பாகிஸ்தான் நடப்பு அணியின் வீரர் உமர் அக்மலைத் திருமணம் செய்து கொண்டார்.
இறந்து கொண்டிருந்த லெக் ஸ்பின் என்ற கலைக்கு உயிர் கொடுத்தவர் அப்துல் காதிர். ஷேன் வார்ன், முஷ்டாக் அகமட் போன்றோருக்கு இவர் ஆலோசகராக, அறிவுரையாளராக இருந்துள்ளார்.
இவரது திடீர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்ச்சியையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தான் விளையாடிய 2வது டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலக கவனத்தை ஈர்த்தவர் அப்துல் காதிர். தற்போதைய பிரதமரும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனுமான இம்ரான் கான் காதிரின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். காதிரை ஒரு மிகப்பெரிய ஸ்பின்னர் என்று அவர் வர்ணித்ததோடு பேட்டிங்கில் ‘பிஞ்ச் ஹிட்டிங்’ என்ற ஒரு கருத்தாக்கத்தை இம்ரான் கான் உருவாக்கிய காலக்கட்டத்தில் அப்துல் காதிரை பல பேட்ஸ்மென்களுக்கு முன்னால் களமிறக்கி அடித்து நொறுக்க வைத்துள்ளார் இம்ரான். இம்ரானின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் அப்துல் காதிர்.
பல பேட்ஸ்மென்களை அச்சுறுத்திய அவர் இந்திய பேட்ஸ்மென்களை அச்சுறுத்த முடியவில்லை. 16 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை மட்டுமே இந்தியாவுக்கு எதிராக அவர் எடுத்துள்ளார்.
மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் காதிர் ஆடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 368 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.
இவரது கடைசி மகன் உஸ்மான் ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 லீகில் ஆடினார். பாகிஸ்தானிய அணியில் வாய்ப்பு கைநழுவிக் கொண்டேயிருந்ததால் ஆஸ்திரேலியாவில் வாய்ப்புக்காக காதிர் மகன் சென்றார்.
உலக கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போது இந்தியாவின் சந்திரசேகருடன் லெக் ஸ்பின் கலை முடிவுக்கு வரும் என்ற நிலையில் லெக் ஸ்பின்னை உலக கிரிக்கெட்டுக்கு புதுப்பித்துக் கொடுத்த அப்துல் காதிர் இன்று நம்மிடையே இல்லை.