Published : 06 Sep 2019 09:45 PM
Last Updated : 06 Sep 2019 09:45 PM

மலிங்கா  ‘மேஜிக்’: நியூஸி. க்கு எதிரான டி20யில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்

பல்லெகிலேயில் நடைபெறும் 3வது டி20 போட்டியில் இலங்கையின் 125 ரன்களை எதிர்த்து நியூஸிலாந்து ஆடிவந்த நிலையில் சற்று முன் மலிங்கா ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.

அதாவது ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி அதற்கு அடுத்த பந்திலும் விக்கெட்டை வீழ்த்தி 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி திகைப்பூட்டும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஏற்கெனவே 2007 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதே போன்று மலிங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால் இது ஓரே ஓவரில் அல்ல, 2 ஓவர்களில் 4 பந்துகளில் வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தார்.

15/0 என்று ஆடிகொண்டிருந்த நிலையில் மலிங்கா 3வது ஓவரை வீசினார் இதில் முதலில் மன்ரோவை இன்ஸ்விங்கரில் பவுல்டு செய்து தனது 100வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அடுத்த பந்தே இடது கை வீரர் ருதர்போர்டுக்கு இன்னொரு இன்ஸ்விங்கர் இதை அவர் கால்காப்பில் வாங்க எல்.பி.அப்பீல், ஆனால் நாட் அவுட் என்று கூற ரிவியூ செய்யப்பட்டது. அதில் அவுட். 2 பந்தில் 2 விக்கெட்.

அடுத்த ஹாட்ரிக் விக்கெட்டாக கொலின் டி கிராண்ட் ஹோம் வந்து நின்றவுடன் சீரும் யார்க்கர் அவர் கால்காப்பில் வாங்க பிளம்ப் எல்பி. ஆனால் நோ-பால் ஆகியிருக்க வேண்டியது மலிங்காவின் கால் மிக நூலிழையில் கொஞ்சம் கிரீசுக்குப் பின்னால் இருந்தது, ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார் மலிங்கா. அதோடு நின்றதா அடுத்த பந்தே ராஸ் டெய்லர் இறங்க அவருக்கும் ஒரு விளையாட முடியாத யார்க்கரை சொருகினார் மலிங்கா டெய்லரும் எல்.பி. ஆகி வெளியேற. நியூசிலாந்து 15/0 என்பதிலிருந்து 15/4 என்று ஆனது.

இந்த ஓவர் முடிந்தது, ஆனால் மீண்டும் ஓரு ஓவர் முடிந்து மலிங்கா பந்து வீசி செய்ஃபர் பந்தை எட்ஜ் செய்ய முதல் ஸ்லிப்பில் குணதிலகா அள்ளிப்போட மலிங்கா அசாத்தியமான ஒரு பந்து வீச்சில் 3 ஓவர்கள் வீசி 1 மெய்டன் 5 ரன்களி 5 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.

நியூஸிலாந்து 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று திணறி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x