Published : 06 Sep 2019 05:56 PM
Last Updated : 06 Sep 2019 05:56 PM

கேப்டன் ரஷீத் கானின் அதிரடி அரைசதம், 4 விக். : வங்கதேசத்துக்கு தோல்வி பயத்தை உருவாக்கும் ஆப்கான்

சட்டோகிராமில் நடைபெறும் ஒரே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 342 ரன்களை எடுத்து டெஸ்ட் போட்டியில் தங்கள் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் பிறகு வங்கதேசத்தை 194 ரன்களுக்கு 8 விக்கெட் என்று சரிவடையச் செய்து தோல்விபயம் காட்டியுள்ளது.

முதல் நாள் ஆட்டத்தில் ரஹமத் ஷா சதம் கண்டு ஆப்கான் டெஸ்ட் வரலாற்றில் முதலில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த பிறகு அஸ்கர் ஆப்கான் 88 ரன்களில் இருந்தவர் 2ம் நாளான இன்று 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அஃப்சர் சசாயும் 41 ரன்களில் தைஜுல் இஸ்லாம் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

ஆனால் கேப்டன் ரஷீத் கான் இறங்கி 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 61 பந்துகளில் 51 ரன்களை ஒரு முனையில் விளாசித் தள்ள ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் 342 ரன்களாக உயர்ந்தது, கடைசி விக்கெட்டாக ரஷீத் கான் அவுட் ஆனார்.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஷத்மன் இஸ்லாம் விக்கெட்டை பூஜ்ஜியத்தில் இழந்தது. அதன் பிறகு வங்கதேசம் கிடுக்கிப் பிடிப் பந்து வீச்சில் ரன்கள் வறண்டன. சவுமியா சர்க்கார் 66 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து பவுண்டரி அடிக்க முடியாமல் நபி பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். லிட்டன் தாஸ் இறங்கி கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டி 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 66 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷீத் கானின் முதல் விக்கெட்டாக புல்ஷாட் ஆடப்போய் பவுல்டு ஆகி வெளியேறினார்.

பிறகு ரஷீத் கான் ஒரே ஓவரில் வங்கதேசத்தை பாலோ ஆன் அச்சுறுத்தலுக்குக் கொண்டு சென்றார், அதாவது வங்கதேசத்தின் இரண்டு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மென்களான ஷாகிப் அல் ஹசன் (11), முஷ்பிகுர் ரஹிம் (0), ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார்.

ரஷீத் கானின் லெக் பிரேக்கில் ஷாகிப் அல் ஹசன் எல்.பி.ஆகி ரிவியூவையும் விரயம் செய்து வெளியேற முஷ்பிகுர் ரஹிம் பின்னால் சென்று ரஷீத் பந்தை தடுத்தாட அது மட்டையில் பட்டு மைதானத்தில் பட்டதா ஷூவில் பட்டதா என்று சரியாகத் தெரியாத நிலையில் ஷார்ட் லெக் பீல்டர் கேட்ச் எடுக்க வெளியேறினார், ஆனால் ரீப்ளேயில் உறுதியாக எதுவும் தெரியவில்லை. 88/5 என்ற நிலையிலிருந்து ஸ்கோர் 104க்கு உயர்ந்த போது மஹ்முதுல்லா (7) அருமையான ரஷீத் கான் கூக்ளிக்கு பவுல்டு ஆனார் 104/6 என்று பாலோ ஆன் அபாயத்தில் இருந்தது வங்கதேசம்.

ஆனால் மொமினுல் ஹக் தனது போராட்ட அரைசதத்தின் மூலம் (52) அணியை பாலோ ஆனிலிருந்து மீட்க உதவினார், ஆனால் இவரும் ஸ்கோர் 130 இருக்கும் போது மொகமது நபியிடம் ஆட்டமிழந்தார். மெஹதி ஹசன் மிராஸ் இன்னொரு லெக் ஸ்பின்னர் குவாசி அகமதுவின் பந்தில் பவுல்டு ஆக 146/8 என்று ஆனது. ஆனால் அதன் பிறகு மொசாடெக் ஹுசைன் (44), தைஜுல் இஸ்லாம் இணைந்து மேலும் சேதமேற்படாமல் 194/8 என்று இன்றைய தினத்தை முடித்தனர். ஆனாலும் இது ஆப்கானிஸ்தான் ஆதிக்கம் செலுத்திய இரண்டாம் நாளாகும். ரஷீத் கான் 18 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அரை சதம் விளாசியும் ஆல்ரவுண்ட் கேப்டனாக தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x