Published : 06 Sep 2019 10:34 AM
Last Updated : 06 Sep 2019 10:34 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் ரபேல் நடால்

நியூயார்க் 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொட ரில் ஸ்பெயினின் ரபேல் நடால் அரை இறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 20-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டிகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்த்து விளையாடினார். இதில் நடால் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் 24-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியுடன் மோதுகிறார் நடால்.

மேட்டியோ பெரெட்டினி தனது கால் இறுதி சுற்றில் 13-ம் நிலை வீரரான பிரான்ஸின் கெல் மோன்பில்ஸை சுமார் 3 மணி நேரம் 57 நிமிடங்கள் போராடி 3-6, 6-3, 6-2, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் 42 வருடங்களுக்குப் பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை பெற்றார் மேட்டியோ பெரெட்டினி. கடைசியாக அந்நாட்டைச் சேர்ந்த கொராடோ பாராஸூட்டி கடந்த 1977-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் அரை இறுதியில் விளையாடியிருந்தார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 13-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வேகிக்கையும், 15-ம் நிலை வீராங்கனையான கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்கு 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் 25-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டென்ஸையும் வீழ்த்த்தி அரை இறுதிக்கு முன்னேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x