Published : 06 Sep 2019 09:28 AM
Last Updated : 06 Sep 2019 09:28 AM

ஆப்கான் அணிக்காக முதல் டெஸ்ட் சதத்தை அடித்து ரஹமத் ஷா சாதனை :  வ.தேசத்துக்கு எதிராக 271/5

சட்டோகிராமில் நடைபெற்று வரும் ஒரேயொரு டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக ஆப்கான் வீரர் ரஹமத் ஷா சதம் கண்டு, ஆப்கான் அணிக்காக முதல் டெஸ்ட் சதம் கண்ட வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

ஆப்கான் அணி முதல் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. அஷ்கர் ஆப்கான் 2வது சதம் எடுத்த ஆப்கான் வீரர் என்ற சாதனையை நோக்கி ஆட்ட முடிவில் 88 ரன்களுடனும் அஃப்சர் சசாய் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதற்கு முன் ரஹமத் ஷா அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 98 ரன்களில் ஆட்டமிழந்து சாதனையைக் கோட்டை விட்டதை நினைத்து கடும் ஏமாற்றமடைந்தார். ஆனால் நேற்று கனவு நினைவானது.

வங்கதேச அணியில் 4 ஸ்பின்னர்கள் இருந்தும் ஆப்கான் அணி 300 ரன்களை நெருங்குவதைத் தடுக்க முடியவில்லை. ரஹ்மத் ஷா தேர்ட்மேன் திசையில் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பி ஆப்கன் டெஸ்ட் முதல் சத நாயகன் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

ஆனால் அடுத்த பந்தே நயீம் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார் ரஹமத் ஷா. இவர் 187 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார்.

முன்னதாக இப்ரஹிம் சத்ரான், ஈசானுல்லா, ஹஸ்மத்துல்லா ஷாகிதி விக்கெட்டுகளை இழந்து 77/3 என்று சரிவு அபாயத்தை எதிர்கொண்டது. ஆனால் அஸ்கர் ஆப்கான், ரஹ்மத் ஷா இணைந்து 120 ரன்களை 4வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

ரஹ்மத் ஷா சதமடித்தவுடன் வெளியேறிய பிறகு மொகமது நபி டக் அவுட் ஆகி வெளியேறினார், ஆனால் 197/5 என்ற நிலையிலிருந்து அஷ்கர் ஆப்கான் (88), அப்சர் சசாய் 35 நாட் அவுட் என்று மேலும் சரிவடையாமல் ஸ்கோரை 271 ரன்களுக்கு உயர்த்தினர்.

வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x