Published : 05 Sep 2019 10:18 AM
Last Updated : 05 Sep 2019 10:18 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

பெடரரை வீழ்த்திய பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ். படம்: ஏஎப்பி

நியூயார்க் 

நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 78-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரரை 3-6, 6-4,3-6,6-4,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதியில் கால் பதித்தார் கிரிகோர் டிமிட்ரோவ்.

பெடரருக்கு எதிராக 8 முறை மோதியுள்ள கிரிகோர் டிமிட்ரோவ் தற்போதுதான் முதன்முறையாக வெற்றி கண்டுள்ளார். குறைந்த தரவரிசையில் உள்ள வீரர் ஒருவர் அமெரிக்க ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெறுவது 28 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்னர் 1991-ம் ஆண்டு அமெரிக்காவின் ஜிம்மி கோனர்ஸ் 174-ம் நிலை வீரராக அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.

முதன்முறையாக அமெரிக்க ஓபன் அரை இறுதிக்கு முன்னேறியுள்ள கிரிகோர் டிமிட்ரோவ் இந்த சுற்றில் 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோது கிறார். மேத்வதேவ் தனது கால் இறுதி சுற்றில் 23-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை 7-6 (8-6), 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 16-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டாவை வீழ்த்தினார். அரை இறுதியில் ஸ்விட்டோலினா 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை சந்திக்கிறார். செரீனா வில்லியம்ஸ் தனது கால் இறுதி சுற்றில் 6-1, 6-0 என்ற நேர் செட்டில் சீனாவின் வாங் கியாங்கை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x