Published : 04 Sep 2019 03:57 PM
Last Updated : 04 Sep 2019 03:57 PM

என்னைச் சுற்றித்தான் அணி; என்னை நீக்கினால் அணி படுத்துவிடும்- தேர்வாளரை மிரட்டினாரா சஞ்சய் பாங்கர்: பிசிசிஐ கூறுவது என்ன?

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் பாங்கர், அணித்தேர்வுக்குழு உறுப்பினர் தேவங் காந்தி அறைக்குச் சென்று அவரையும் இந்திய கிரிக்கெட் அணித்தேர்வுக்குழுவையும் சரமாரியாக விமர்சனம் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் பயிற்சி என்பது நல்ல சம்பளம், பிற சலுகைகள் கொண்ட ‘பெரிய இடம்’ என்பதால் அங்கு பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது, அதே போல் பணம் புழங்கும் இடம் என்பதால் அங்கு பதவி வகிப்பவர்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் பதவியை இழக்க விரும்ப மாட்டார்கள். அனில் கும்ப்ளே விதிவிலக்கு.

இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பல்வேறு புகார்கள் காரணமாக நீக்கப்பட்டதாகக் கருதப்படும் சஞ்சய் பாங்கர், தேவங் காந்தி அறைக்குள் புகுந்து அவரையும் அணித்தேர்வுக்குழுவையும் கடுமையாக வசை பாடியதாக பிசிசிஐ வட்டாரம் ஒன்று ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது. அதாவது தன்னைச் சுற்றியே இந்தியா அணி செயல்பட்டு வருகிறது என்றும் தன்னை நீக்கினால் அணி படுத்து விடும் என்றும் மிரட்டல் கூச்சலிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதோடு மட்டுமல்லாமல் அப்படித் தன்னை நீக்க முடிவெடுத்தால் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தன்னை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் அணியில் தோனியை பேட்டிங் வரிசையில் முன்னாள் களமிறங்கச் செய்வதையும் சஞ்சய் பாங்கர் ஒப்புக் கொள்ளவில்லை என்று ஆங்கில ஊடக செய்தி ஒன்று தெரிவிக்கிறது, ஆனால் இவற்றினால் புகார்கள் எதுவும் எழவில்லை என்றாலும் அவரது நீக்கத்தின் பின்னணியில் இம்மாதிரி விவகாரங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.

பிசிசிஐ கூறுவது என்ன?

இந்நிலையில் சஞ்சய் பாங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தரப்பில் ரவி சாஸ்திரியோ, மேலாளர் சுனில் சுப்ரமணியனோ அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே சஞ்சய் பாங்கர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, “முதலில் தேவங் காந்தி சம்பந்தப்பட்ட நபர் ஆவார், அவர்தான் முதலில் புகார் தெரிவிக்க வேண்டும், அதே போல் வெளியேறும் மேலாளர் சுனில் சுப்ரமணியன் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் பங்கருக்கு ஏமாற்றம் இருக்கலாம், ஆனால் சாஸ்திரி, அருண், ஸ்ரீதர் நன்றாகச் செயல்பட்டனர் நீட்டிப்பு பெற்றனர், பங்கர் சரியாகச் செயல்படவில்லை நீக்கப்பட்டுள்ளார், இதற்காக அவர் தேவங் காந்தியிடம் போய் சத்தம் போடும் வேலையிலெல்லாம் ஈடுபடக்கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x