Published : 04 Sep 2019 11:26 AM
Last Updated : 04 Sep 2019 11:26 AM

இந்திய அணி மிக முக்கியமான நட்சத்திர வீரரால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது: இர்பான் பதான் கண்டறிந்த வீரர் யார்?

கொல்கத்தா,

இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிர்த் பும்ராதான். அவரால்தான் அணி ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பெருமிதம் அடைந்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 13 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்வதற்கு முக்கியக் காரணங்களில் பும்ராவும் ஒருவர்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஹர்பஜன், இர்பான் பதான் ஆகியோருடன் பட்டியலிலும் பும்ரா இணைந்துள்ளார். பும்ராவின் மின்னல் வேகப்பந்துவீச்சு, ஸ்விங் பந்துவீச்சையும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான்களே புகழ்ந்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதானும் பும்ராவைப் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

''எனக்குத் தெரிந்து இந்திய அணியில் மிக முக்கியமான வீரர் என்றால் அது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என்று நினைக்கிறேன்.

இந்திய அணியில் பும்ரா விளையாடாவிட்டால், மற்ற அனைத்தைக் காட்டிலும் இந்திய அணிக்குப் பெரும் இழப்பு. இந்திய அணியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வீரர் பும்ரா. பும்ரா போன்ற வீரரால் இந்திய அணி ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இவரை இந்திய அணி கவனமாகப் பார்ப்பது அவசியம். இவர் போன்ற வீரர் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகையான போட்டிகளிலும் சாதிப்பது கடினமான விஷயம்.

பும்ரா டெஸ்ட் போட்டியில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுடன் அவர் நின்றுவிடமாட்டார் என்று உறுதியாகக் கூறுகிறேன். இன்னும் அதிகமான ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவார். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழாது.

சிலவீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஹாட்ரிக் விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இருந்திருக்கிறார்கள். ஒருமுறை இந்தச் சாதனையைச் செய்துவிட்டால், அரிதான ஒரு விஷயத்தை செய்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.

என்னுடைய ஹாட்ரிக் விக்கெட் குறித்து நான் குறிப்பிட வேண்டுமானால், என்னுடைய குடும்பத்தினருக்குத்தான் அந்த ஹாட்ரிக் விக்கெட்டை அர்ப்பணிப்பேன். என் குடும்பத்தின் ஆதரவு இன்றி என்னால் அதை அடைந்திருக்க முடியாது’’.

இவ்வாறு இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x