

நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை தோல்வி அடையச் செய்து அரையிறுதிக்கு முன்னேறினார் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ்.
இதற்கு முன் பெடரரை எதிர்கொண்ட 7 போட்டிகளிலும் 78-வது இடத்தில் உள்ள டிமிட்ரோவ் தோல்வி அடைந்துள்ள நிலையில் முதல் முறையாக பெடரரை போராடிச் சாய்த்துள்ளார்.
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் தரநிலையில் 3-வது இடத்தில் இருந்த பெடரர் காலிறுதியோடு வெளியேறியது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஏற்கெனவே ஜோகோவிச் வெளியேறிய நிலையில், அடுத்த நட்சத்திர வீரரும் வெளியேறியுள்ளார்.
ஆடவர் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பெடரரை எதிர்கொண்டார் பல்கேரிய வீரர் டிமிட்ரோவ். ஏறக்குறைய 3 மணிநேரம் 12 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரரை 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார் டிமிட்ரோவ்.
முதல் செட்டில் இருந்தே பெடரருக்கு கடும் நெருக்கடி அளிக்கும் விளையாடி வந்தார் டிமிட்ரோவ். இதனால் முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் பெடரர் வென்றார். ஆனால் 2-வது செட்டில் கடும் போட்டி அளித்த டிமிட்ரோவ் 4 கேம்களை விட்டுக்கொடுத்து 6-4 என்ற செட்களில் பெடரரை வீழ்த்தினார். 3-வது செட்டை பெடரரும் 4-வது செட்டை டிமிட்ரோவும் மாறி மாறிக் கைப்பற்றினர். வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் 5-வது செட்டில் தொடக்கத்தில் இருந்த பெடரருக்கு கடும் சவால் அளித்து சர்வீஸ்களையும், பந்தைத் திருப்பி அனுப்புதலையும் லாவகமாகக் கையாண்டார் டிமிட்ரோவ்.
கடந்த 4 செட்களிலும் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய பெடரர் கடைசி செட்டில் 2 கேம்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனால் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி பெடரரை வெளியேற்றினார் டிமிட்ரோவ்.
இறுதி செட்டில் பெடரரை 4-0 என்ற கணக்கில் இரு முறை பிரேக் செய்தார் டிமிட்ரோவ். இந்தப் போட்டியில் சர்வீஸ்களிலும், பந்தை திருப்பி அனுப்புதலிலு்ம 61 தவறுகளை பெடரர் செய்ததால் அவர் தோல்வி அடைந்தார்.
இந்த வெற்றி குறித்து டிமிட்ரோவ் கூறுகையில், "நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் போட்டியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும்தான் இருந்தது. உடல்ரீதியாக நான் நலமாக இருக்கிறேன். நான் அடித்த சில ஷாட்களை பெடரரே எதிர்கொண்டு திருப்பி அனுப்ப மிகவும் சிரமப்பட்டார்" எனத் தெரிவித்தார்.
ஏடிபி தரவரிசையில் மிகவும் குறைவான தரவரிசையில் அதாவது 74-வது இடத்தில் இருக்கும் ஒருவர் யு.எஸ். ஓபனில் அரையிறுதிக்கு வருகிறார். கடந்த 1991-ம்ஆண்டு 174-வது இடத்தில் இருந்த ஜிம்மி கானர்ஸுக்குப்பின் இப்போது டிமிட்ரோவ் தரவரிசையில் குறைந்த வீரர் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்.
தோல்வி குறித்து பெடரர் கூறுகையில், "நான் விளையாடிய 5 செட்களும் சிறப்பானது. விளையாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கும். இது டிமிட்ரோவ்வுக்கு உரிய தருணம், எனக்கானது அல்ல. நான் என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆடினேன். டிமிட்ரோவ் என்னைக் காட்டிலும் சிறப்பாக ஆடினார்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ