Published : 03 Sep 2019 04:30 PM
Last Updated : 03 Sep 2019 04:30 PM

அணியில் புறக்கணிப்பா? டி20 போட்டியில் இருந்து இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வு

புதுடெல்லி,


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

டி20 போட்டியில் முதல்முறையாக 2 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் போது, அரையிறுதியில் மிதாலி ராஜ் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படாமல் அமரவைக்கப்பட்டார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இம்மாதம் 24-ம் தேதி இந்தியாவில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட விருப்பம் இருப்பதாக கடந்த வாரம் மிதாலி ராஜ் தெரிவித்திருந்தார். அதனால் அணியிலும் மிதாலி ராஜ் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு முன்பாக திடீரென மிதாலி ராஜ் ஓய்வு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

36 வயதான மிதாலி ராஜ் இனிமேல் தனது கவனம் அனைத்தையும் ஒருநாள் போட்டியில் மட்டும் செலுத்தப்போவதாகவும், 2021-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைப் போட்டிக்காக தயாராகப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், " கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய மகளிர் டி20 அணியில் இடம்பெற்று வந்தவர் மிதாலி ராஜ். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 2021-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்காக கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதாலி ராஜ் இதுவரை 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்கள் சேரத்துள்ளார். அதிகபட்சாக 97 ரன்கள் மிதாலி ராஜ் எடுத்துள்ளர். கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து இந்திய மகளிர் டி20 அணியில் இடம் பெற்ற மிதாலிராஜ், கடந்த மார்ச் மாதம் கவுகாத்தியில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் அணிக்காக 32 போட்டிகளில் மிதாலி ராஜ் கேப்டனாக இருந்துள்ளார். கடந்த 2012, 2014, 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் கேப்டனாக மிதாலி ராஜ் இருந்தார்.

ஜோத்பூரைச் சேர்ந்த மிதாலி ராஜ் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருடன் ஓய்வு பெற திட்டமிட்டு இருந்தார். ஆனால், திடீரென தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராக வரும் 24-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, மிதாலி ராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். வரும் 24-ம் தேதி டி20 தொடர் தொடங்கும் நிலையில் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் மிதாலி ராஜுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியின் மீது அரையிறுதியில் வேண்டுமென்றே தன்னை அணியில் இடம் பெறாமல் வைத்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையை சீரழிக்கத் திட்டமி்ட்டுள்ளார் என்று ரமேஷ் பவார் மீது மிதாலி ராஜ் பரபரப்புகுற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரமேஷ் பவார் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, டபிள்யு வி ராமன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதுவரை 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 6,720 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 51.29 ரன்கள் வைத்துள்ள மிதாலி 7 சதங்கள் அடித்துள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்ளிட்ட 663 ரன்களை மிதாலி குவித்துள்ளார்.
பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x