

கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கும், அவரின் சகோதரர் ஹசித் அகமதுக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவரும் 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சரண் அடையாவிட்டால் இருவரையும் கைது செய்யப்படுவார்கள். தற்போது முகமது ஷமி மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவருக்கு15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் சகோதரரை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முகமது ஷமயின் மனைவி ஹசின் ஜகான் கடந்த 2018-ம் ஆண்டு ஷமி மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் பல்வேறு புகார்களை போலீஸில் அளித்தார். இதில் ஷமியின் மூத்த சகோதரர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும் கொலை செய்ய முயன்றார் என்றும் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டார் என்றும் அவரின் மனைவி புகார் கூறினார். இதையடுத்து, பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து ஷமி நீக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஷமி மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று உறுதியானதையடுத்து, அவருக்கு ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். வழக்கின் விசாரணை கொல்கத்தா அலிப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்ற விசாரணைக்கு முகமது ஷமியும், அவரின் சகோதரர் ஹசித் அகமதுவும் ஆஜராகததையடுத்து, இருவருக்கும் நீதிபதி சுப்தரா முகர்ஜி நேற்று கைது வாரண்ட் பிறப்பித்தார்.
முகமது ஷமி வெளிநாட்டில் இருப்பதால், 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும், அவரின் சகோதரர் உள்ளூரில் இருப்பதால் உடனடியாக அவரை போலீஸார் கைது செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்," முகமது ஷமிக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதை அறிந்தோம். உடனடியாக இதுகுறித்து ஷமியின் வழக்கறிஞரிடம் பேசினோம். இந்த வழக்கின் முழுமையான விவரங்களைக் கேட்டுள்ளோம். அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு முகமது ஷமியைத் தேர்வு செய்யலாமா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை (இன்று) முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்