Published : 02 Sep 2019 11:33 AM
Last Updated : 02 Sep 2019 11:33 AM

மலிங்காவின் அபாரப் பந்து வீச்சு வீண்: டெய்லர்,கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியில் நியூஸி. வெற்றி

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு ஆடிவரும் நியூஸிலாந்து அணி பல்லகிலேயில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மலிங்கா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார், அவரை முடிவை ஏமாற்றாமல் பேட்ஸ்மென்கள் வெளுத்துக்கட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முன்னிலை பெற்றது.

அணி தோல்வியடைந்தாலும் கேப்டன் மலிங்கா அபாரமாக வீசி 4 ஒவர்களில் 13 டாட்பால்களுடன் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். லெக் ஸ்பின் பவுலர் ஹசரங்க டிசில்வா 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் ரஜிதா 4 ஓவர்களில் 44 ரன்களையும் தனஞ்ஜயா 3 ஓவர்களில் 30 ரன்களையும் ஜெயசூரியா 1 ஓவரில் 10 ரன்களையும் விட்டுக் கொடுத்ததால் இலங்கை தோல்வி தழுவியது.

கொலின் டி க்ராண்ட்ஹோம் ராஸ் டெய்லர் இணைந்து 37 பந்துகளில் 79 ரன்களை 4 வது விக்கெட்டுக்காக விளாசியது மலிங்காவின் அபார பந்துவீச்சிலும் இலங்கைக்குத் தோல்வியைத் தேடித்தந்தது. ராஸ் டெய்லர் 29 பந்துகளில் 3 நான்குகள் 2 ஆறுகள் வீதம் 48 ரன்களையும் கிராண்ட் ஹோம் 28 பந்துகளில் 4 நான்குகள் 2 ஆறுகளைப் பறக்கவிட்டு 44 ரன்களையும் எடுத்தனர். டி.ஜே.மிட்செல் 2 ஆறுகளுடன் 19 ரன்களை எடுத்தார். சாண்ட்னர் ஒரு ஆறுடன் 8 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.

39/3 என்ற நிலையில் கொலின் டி கிராண்ட் ஹோம், டெய்லர் கூட்டணி சேர்ந்தது, வெற்றி பெறத் தேவையான ரன் விகிதம் 11 ரன்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் இருவரும் 4 ஆறுகள் 7 நான்குகளை இருவரும் விளாசித்தள்ளினர்.

இலங்கை பந்துவீச்சில் பெரிய சிரமம் என்னவெனில் பந்து ஈரமாகி வழுக்கிக் கொண்டு சென்றதால் பவுலர்கள் பந்தைப் பற்ற முடியவில்லை.

இலங்கையை பொறுத்தவரை குசல் மெண்டிஸ் அருமையாக ஆடி 53 பந்துகளில் 8 நான்குகள் 2 ஆறுகளுடன் 79 ரன்கள் எடுத்தார். நிரோஷன் டிக்வெல்லா (33) உடன் இணைந்து இருவரும் 63 ரன்களைச் சேர்த்தனர். டிம் சவுதி பிரமாதமாக வீசி 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதே போல் சாண்ட்னர் 4 ஓவர்களில் 22 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ஆனால் ரான்ஸ் என்ற பவுலர் 4 ஓவர்களில் 58 ரன்கள் விளாசப்பட்டார்.

சவுதி போலவே மலிங்காவும் சிறப்பாக வீசினார், அதுவும் கொலின் மன்ரோ, டிகிராண்ட் ஹோமுக்கு வீசிய பாதம்பெயர்ப்பு யார்க்கர்கள் குறிப்பிடத்தகுந்தவை. கொலின் டி கிராண்ட் ஹோம், டெய்லர் இணைந்து 11, 12, 13 ஒவர்களில் தொடர்ச்சியாக ஓவருக்கு 17 ரன்களை விளாசித்தள்ளினர். பவுண்டரிகளுடன் நன்றாக ஓடவும் செய்தனர். டெய்லர் 31 ரன்களில் இருந்த போது கேட்சை தசுன் ஷனகா எளிதான வாய்ப்பை விட்டார், அதனால் இலங்கையின் வாய்ப்புகள் குறைந்தன.

ஆட்ட நாயகன் ராஸ் டெய்லர், அடுத்த போட்டி செவ்வாயன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x