Last Updated : 02 Sep, 2019 11:18 AM

 

Published : 02 Sep 2019 11:18 AM
Last Updated : 02 Sep 2019 11:18 AM

விஹாரி, ரஹானே அபாரம் கோலி டக் : இமாலய இலக்கால் வெற்றியை நோக்கி இந்தியா: மே.இ.தீவுகள் திணறல் 

2-வது டெஸ்டின் 2-வது இன்னிஸில் அரைசதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் விஹாரி, ரஹானே : படம் உதவி பிசிசிஐ

கிங்ஸ்டன்


ஹனுமா விஹாரி, ரஹானே ஆகியோரின் சிறப்பான 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தில் கிங்ஸ்டனில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெற 468 ரன்கள் நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

468 ரன்கள் இலக்காக கொண்டு 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய மே.இ.தீவுகள் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்துள்ளது.

இன்னும் வெற்றி இலக்கிற்கு 423 ரன்கள் தேவைப்படுகிறது, இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் கையில் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. ஆடுகளம் கடைசி இரு நாட்கள் வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் நன்கு ஒத்துழைக்கும் என்பதால், இன்று நடைபெறும் 4-வது நாள் ஆட்டத்தில் முடிவு தெரிவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும் தோல்வியைத் தவிர்க்கும் பொருட்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி போராடி வருகிறது.

3-வது நாள் ஆட்ட நேர இறுதியில் மே.இ.தீவுகள் அணியின் பிராவோ 18 ரன்னிலும், புரூக்ஸ் 4 ரன்னிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 2-வது ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது.

ஹேமில்டன் 2 ரன்னிலும், கார்ன்வால் 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்டம் தொடங்கியவுடன் 14.1 ஓவர்கள் மட்டுமே விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் இழந்தது. கார்ன்வால் 14 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் ஹேமில்டன் 5 ரன்னில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக ஆடிய ரோச் 17 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்து 299 ரன்கள் இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கியது. இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்திய அணி பாலோ-ஆன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி பலோ-ஆன் வழங்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ரோச், ஹோல்டர் ஆகியோரின் துல்லியமான வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால், ராகுல் இந்த முறையும் நிலைக்காமல் விரைவாக ஆட்டமிழந்தனர். ரோச் வீசிய 5-வது ஓவரில் அகர்வால் 6 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த புஜாரா, ராகுலுடன் சேர்ந்தார். இந்தக் கூட்டணியும் நிலைக்கவில்லை. ராகுல் 63 பந்துகளைச் சந்தித்து 6 ரன்கள் சேர்த்த நிலையில், ரோச்பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஹேமில்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கோலி முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ஹேமில்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு வந்த ரஹானே, புஜாராவுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய புஜாரா 27 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் ஸ்லிப்பில் புரூக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் புஜாரா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த முதல் டெஸ்ட்டிலும் 30 ரன்களைத் தாண்டவில்லை, 2-வது டெஸ்டிலும் 30 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை.

ஆனால், 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்நத் ரஹானே, விஹாரி இருவரும் மே.இ.தீவுகள் பந்துவீச்சை அனாசயமாக விளையாடினார்கள். இருவரும் ஒருநாள் போட்டியைப் போன்று அதிரடியாக பவுண்டரிகளாக விளாசியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

விஹாரி 67 பந்துகளில் அரை சதத்தையும், ரஹானே 91 பந்துகளில் அரைசதத்தையும் நிறைவு செய்தனர். ரஹானே 64 ரன்களிலும், விஹாரி 53 ரன்கள் சேர்த்திருந்தபோது, இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது .2-வது இன்னிஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்திருந்த போது டிக்ளே செய்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு 468 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

போத்தி ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x