

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சரியான ரெக்கார்ட் வைத்திருக்கும் அஸ்வினை உட்கார வைத்து விட்டு ஜடேஜாவை அணியில் தேர்வு செய்ததைப் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஜடேஜா ஏன் என்று ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது அஸ்வினைத் தேர்வு செய்யாதது ‘அதிர்ச்சியளிக்கிறது’என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அதிர்ச்சி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரவிசாஸ்திரி கூறியிருப்பதாவது:
ஜடேஜாவின் சாதனைகள் தான் காரணம். அவர் இந்திய அணிக்கு என்ன கொண்டு வருகிறார் என்பதுதான் முக்கியம். தற்போது உலகின் சிறந்த பீல்டர் அவர், பேட்டிங் பார்மில் கடுமையான முன்னேற்றம் காட்டியுள்ளார்.
மேலும் இந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்சைப் பாருங்கள், பிளாட் ட்ராக்காக உள்ளது. இங்கு ஸ்பின்னர்களுக்கு பெரிதாக எதுவும் பலன் இருக்காது என்று கருதினோம். அதனால் இங்கு கட்டுப்பாட்டுடன் வீச வேண்டிய தேவையிருக்கிறது.
முதல் டெஸ்ட்டில் ஜடேஜாவை தேர்வு செய்யக் காரணம், ஒருவேளை நாம் முதலில் பவுலிங் செய்ய வேண்டியிருந்தால் பிட்சின் ஈரப்பதம் ஜடேஜாவின் பந்து வீச்சு முறை மே.இ.வீரர்களை கொஞ்சம் கடினப்படுத்தியிருக்கும். முதல் செஷனிலேயே அவரைப் பயன்படுத்த முடியும்.
அதனால்தன ஜடேஜாவை தேர்வு செய்தோம். அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர், ஆகவே அவரையோ, குல்தீப் யாதவையோ உட்கார வைப்பது என்பது கடினமான முடிவாகும்.
இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி.