Published : 31 Aug 2019 05:35 PM
Last Updated : 31 Aug 2019 05:35 PM

ஹோல்டர், கிமார் ரோச், கார்ன்வால் அருமையாக வீசியும் அதிர்ஷ்டமில்லாத மே.இ.தீவுகள்

விராட் கோலி ஆட்டமிழந்தார். | ஏ.பி./ பிடிஐ

சபைனா பார்க் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததால்தான் ஹோல்டர் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். ஆனால் மே.இ.தீவுகள் அணிக்கு நேற்று அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

மயங்க் அகர்வால், விராட் கோலி அணியை மீட்டாலும் இருவருக்குமே அதிர்ஷ்டக்காற்று அடித்தது என்பதே போட்டியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் உண்மையாகும். நல்ல பந்துகளை இந்திய பேட்ஸ்மென்களால் ரன்னுக்கு மாற்ற முடியவில்லை, அப்படி ரன்னுக்கு மாற்றிய பந்துகளும் பேட்ஸ்மென் விருப்பத்துக்கு மாறாக எட்ஜ்களில் சென்றதே. அதுவும் எட்ஜ்கள் சில ஸ்லிப் பீல்டருக்கு முன்னால் விழும், இல்லையெனில் விக்கெட் கீப்பர், ஸ்லிப் பீல்டருக்கு இடையே எழும்பிச் செல்லும்.

அதாவது நல்ல பிட்சில் தரமான பந்து வீச்சை ஆடும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மென்கள் கோலி உட்பட இன்னமும் கூட தங்கள் ஆட்டத்தை அப்பழுக்கற்ற விதத்தில் உயர்த்திக் கொள்ளவில்லை என்பதே நேற்று வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். போட்டிகளைப் பற்றிய குறைபடு வர்ணனையினாலும் ‘ஹைப்’ கொடுக்கப்படுவதாலும் கிரிக்கெட் உலகின் சூப்பர் பவர் இந்திய அணி என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டு வருவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

பசும்புற்கள் ஆங்காங்கே தெரிந்தாலும் பிட்ச்சில் பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பின, கே.எல்.ராகுல் ஆட்டமிழந்த பந்து இதற்கு உதாரணம் பந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சற்றே எழும்பி வெளியே ஸ்விங் ஆனது, இது ராகுலின் நிலையை ஸ்கொயராக மாற்றியது ராகுலின் முயற்சி இல்லாமலேயே பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. கேப்ரியல் மட்டும்தான் சரியாக வீசவில்லை. முழங்கால் காயத்தினால் அவர் பந்துகளை குத்தி எழுப்புவதற்குப் பதிலாக ஃபுல் லெந்தில் வீசியது எளிதாகப் போனது இந்திய வீரர்களுக்கு.

இதனையடுத்து ஆறரை அடி உயர அதிக உடல் எடை பவுலர் ரக்கீம் கார்ன்வால் பந்து வீச அழைக்கப்பட்டார், அவர் புதிய பந்திலும் அற்புதமாக வீசினார், அவரது உயரம் காரணமாக அவர் வீசும் லெந்த் இந்திய வீரர்கள் விரும்பும் வகையில் முன்னால் வந்தோ, மேலேறி வந்தோ ஆட முடியாமல் செய்தது, புஜாரா ஸ்பின் பவுலிங்கை நன்றாக ஆடக்கூடியவர் என்று தெரிந்தாலும் பின்னால் சென்று ஆடுவது அவருக்கு பெரும் பிரச்சினையாக மாறியது, அவரும் எழும்பிய ஒரு கார்ன்வால் பந்தை கட் செய்ய முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார்.

மயங்க் அகர்வாலுக்கு கேப்ரியல் பந்து ஒன்று எட்ஜ் ஆகி ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது. இன்னும் இருமுறை கிமார் ரோச்சின் ஒரே ஓவரில் அகர்வாலுக்கு எட்ஜ் ஆக கேட்ச் ஆக வேண்டிய பந்து விக்கெட் கீப்பர், ஸ்லிப் பீல்டர்களையும் ஏமாற்றி காற்றில் சென்று பவுண்டரி ஆக அவர் அரைசதத்தை திருப்தியளிக்காத வகையில் பூர்த்தி செய்தார்.

விராட் கோலிக்கு கார்ன்வால் சில ஆட முடியாத பந்துகளை வீசினார், கோலி ஒருமுறை ஒரு வலுவான எல்.பி.அப்பீலிலும் தப்பினார். பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்வதாக ரீப்ளேயில் காட்டியது. அதே போல் விராட் கோலியை இன்ஸ்விங்கரில் எல்.பி.செய்தார் கிமார் ரோச் ஆனால் இதுவும் இந்தியாவுக்குச் சாதகமாகவே அமைந்தது, இதனால் இந்திய அணி 165 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்திருக்க வேண்டும், ஆனால் 4விக்கெட்டுகளுடன் தொடர்ந்தது.

கடைசியில் மயங்க் அகர்வாலுக்கு ஜேசன் ஹோல்டர் ஒரு பந்தை எழுப்ப அகர்வாலுக்கு ஆடுவதற்கு போதிய இடம் இல்லாமல் ஆட்டமிழந்தார்.

கோலியையும் ஜேசன் ஹோல்டர் சோதித்தார், ரவுண்ட் த விக்கெட்டில் ஷார்ட் பிட்ச் உத்தியைக் கடைபிடித்து லெக் திசையில் டீப்பில் 2 பீல்டர்களை வைத்தும் ஆஃப் திசையில் 2 கல்லிகளை வைத்தும் வீசினார், ஒரு கட்டத்தில் விராட் கோலி சுடு அடுப்பில் நிற்கும் வீரர் போல் இரு கால்களையும் தூக்கி விகாரமாக ஆட நேரிட்டது. இது போன்றுதான் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் ஆட்டமிழந்தது நினைவிருக்கலாம். ஆனால் இம்முறை கோலி தப்பினார்.

கடைசியில் கோலியை ஒருவழியாக பின்காலுக்கு பழக்கிய ஹோல்டர் பிறகு ஓவர் த விக்கெட்டுக்கு மாறி இயல்பான பந்துகளை வீசினார். கோலி பீட்டன் ஆகிக் கொண்டிருந்தார். கடைசியில் கோலியை வீழ்த்தியே விட்டார் ஹோல்டர். உடலுக்குத் தள்ளி மட்டையை செலுத்த பந்து எட்ஜ் ஆகி கீப்பரிடம் சென்றது. இத்தனைக்கும் இது புதிய பந்தல்ல, 72 ஓவர்கள் முடிந்த பழைய பந்துதான். கோலியின் அதிர்ஷ்டத்தினால் அவர் நேற்று 73 ரன்களை எடுத்தார், அவரும் விட்டுக் கொடுப்பவர் அல்லவே அவரும் போராட்டக்காரர் என்பதால் விக்கெட்டை விடாமல் ஆடினார், அதுதான் கோலிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம், ஆனால் உலக அளவில் பெரிய வீரர் என்று உருவான பிறகு 72வது ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறுவது இவ்வளவு உயரம் சென்ற வீரருக்கு கொஞ்சம் தலைகுனிவுதான். கோலி இன்னும் கூட துல்லியமாக ஆடினால்தான், பவுலர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆதிக்கம் செலுத்தினால்தான் இவரை விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், லாரா, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பெருந்தலைகளுடன் ஒப்பிட முடியும்.

தனது பேட்டிங் பற்றி வெளியே உலா வரும் ‘உயர்வு நவிற்சி’ (ஹைப்) பாராட்டுதல்களை, தூக்குதல்களை அவர் தன் மண்டையில் ஏற்றி கொள்ளாமல் மேலும் மேலும் துல்லியம், ஆதிக்கத்தை நோக்கி பேட்ஸ்மெனாக உயர வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

ஒருவர் செய்யும் சாதனைகள் வேறு, ஆட்டத்திறன் என்பது வேறு. இரண்டுக்குமான அளவுகோல்கள் வேறு வேறு. சாதனைகளை வைத்து ஒருவரை அந்த அளவில் கிரேட் என்று கூறலாம், ஆனால் ஆட்டத்தின் நுணுக்கங்களுடன் வைத்து பிற கிரேட்களுடன் ஒப்பிடுவது என்பது ‘பியூர் பேட்ஸ்மெனாக’ எப்படி ஒருவர் தன்னை கிரேட்டாக மாற்றிக் கொள்கிறார் என்பதைப் பொறுத்ததே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x