

புதுடெல்லி,
பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண், இந்திய ஏ அணியில் இணைந்து தனது திறமையை மெருகேற்ற உள்ளார்.
அதேசமயம், உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து காயத்தால் அவதிப்பட்டு உடல்நலம் தேறிய தமிழகவீரர் விஜய் சங்கர் இந்திய ஏ அணியில் இடம் பெற்றார். ஆனால் மீண்டும் அவருக்கு காயம் ஏற்படவே அவர் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க ஏ அணி அதிகாரபூர்வமில்லாத 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் உலகக் கோப்பைப் போட்டியின் போது கையில் காயம் ஏற்பட்டு விலகினார். அதன்பின் ஓய்வில் இருந்த தவண், மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்கு தேர்வாகினார்.
ஆனால், 3 டி20(1,23,2), மற்றும் 2(2,36) ஒருநாள் போட்டியில் பங்கேற்ற தவண் மோசமாக பேட்டிங் செய்து 65 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதையடுத்து, இழந்த பேட்டிங் ஃபார்மை மீட்கும் முயற்சியில் இறங்கிய தவண், இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதையடுத்து, இந்திய ஏ அணி தெ ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோதும் கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் மட்டும் தவண் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்திய ஏ அணியில் இடம் பெற்று இருந்த தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விஜய் சங்கர் பீல்டிங் செய்தபோது, அவரின் வலதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த வாய்ப்பையும் காயம் காரணமாக விஜய் சங்கர் வீணடித்தார். பயிற்சியின் போது வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வீசிய யார்கரில் கனுக்காலில் அடிபட்டு விலகினார். அதன்பின் காயத்தில் இருந்து மீண்டு இந்திய ஏ அணியில் இடம் பெற்ற விஜய் சங்கர் மீண்டும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.
பிடிஐ