எல்.பி.டபிள்யூ ஷேன் வாட்சனுக்கு சிக்கல்

எல்.பி.டபிள்யூ  ஷேன் வாட்சனுக்கு சிக்கல்
Updated on
1 min read

தொடர்ந்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வரும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நோட்டீஸ் பீரியடில் இருப்பதாக ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

19 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 14 முறை ஷேன் வாட்சன் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறியுள்ளார். இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் இந்த 14 முறைகளில் 9 முறை அவர் மேல்முறையீடு செய்ததில் ஒருமுறைதான் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமைந்த்து.

59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் 109 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை மட்டுமே எடுத்துள்ளார், 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் மிட்செல் மார்ஷ் அல்லது ஷான் மார்ஷ் ஆட வேண்டிய இடத்தில் மைக்கேல் கிளார்க் நம்பிக்கை வைத்து வாட்சனுக்கு வாய்ப்பளித்தார். ஆனால் கார்டிப்பில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்த முதல் ஆஷஸ் போட்டியில் வாட்சன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நேர் பந்துகளில் எல்.பி. ஆகி வெளியேறியது அவர் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 30 மற்றும் 19 ரன்களை எடுத்து எல்.பி. ஆனார் வாட்சன்.

இந்த நடுவர் தீர்ப்புகளை எதிர்த்தும் மேல் முறையீடு செய்து தோல்வியடைந்தார் வாட்சன். டெஸ்ட் போட்டிகளில் 5-வது முறையாக 2 இன்னிங்ஸ்களிலும் எல்.பி.டபிள்யூ ஆகியுள்ளார் வாட்சன்.

மொத்தமாக 29 முறை எல்.பி முறையில் ஆட்டமிழந்துள்ளார் வாட்சன். இதனால் ஆலன் பார்டர் வாட்சனை நோட்டீஸ் பீரியடில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “தோல்வியை முன்வைத்து அதிகமாக யோசிக்க வேண்டாம், இதே வீரர்களுடன் 2-வது டெஸ்ட் போட்டியிலும் தொடரலாம். ஆனால் சில வீரர்களிடத்தில் கடுமை காட்டுவது அவசியம். குறிப்பாக ஷேன் வாட்சன், 'இப்போது இல்லையெனில் எப்போதும் முடியாது' என்று அவரிடம் கூறிவிட வேண்டும்.

இனிமேல் கால்காப்புகளில் வாங்காத அளவுக்கு அவரால் உத்தி ரீதியாக மாற்றிக் கொள்வது கடினம். ஆனால் அவர் கிரீஸில் இறங்கியது முதல் பாசிட்டிவாக ஆட வேண்டும். அவர் திறமையானவர்தான், ஆனால் அவர் திறமை இன்னமும் பூர்த்தியடையவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in