Last Updated : 31 Aug, 2019 10:16 AM

 

Published : 31 Aug 2019 10:16 AM
Last Updated : 31 Aug 2019 10:16 AM

இந்திய அணியை மீட்ட கோலி, அகர்வால்: ஹோல்டர் அபார பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் திணறடித்த '140 கிலோ' கார்ன்வால்

கிங்ஸ்டன்,


கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட்கோலி, மயங்க் அக்ரவால் ஆகியோரின் அபாரமான அரை சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப்பந்த் 27 ரன்னிலும், விஹாரி 42 ரன்னிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

புற்கள் நிறைந்த ஆடுகளத்தை பயன்படுத்திக் கொண்ட மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அறிமுக வீரராக களமிறங்கிய ஆப்-ஸ்பின்னரும் 140 கிலோ எடைகொண்ட ரக்கீம் கார்ன்வெல் தனது சுழற்பந்துவீச்சால் விராட் கோலி உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். 27 ஓவர்கள் வீசிய கார்ன்வெல் 45 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அதிரடியாக பேட் செய்துவரும் ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி: படவிளக்கம்

முதல் செஷனிலேயே கே.எல்.ராகுல், புஜாரா விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 72 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. ஆனால், 3-வது விக்கெட்டுக்கு கோலி, அகர்வால் கூட்டணி 69 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு அணியை தூக்கிநிறுத்தினார்கள்.

அடுத்ததாக அஜின்கயே ரஹானேயுடன் கூட்டணி சேர்ந்த கோலி அவருடன் 49 ரன்கள் சேர்த்தார். இதனால் 2-வது செஷனில் இந்திய அணி 85 ரன்கள் சேர்த்தது.

ஆனால்,இறுதி செஷனில் கோலி(76), ரஹானே(24) ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்திய அணியின் ரன் குவிக்கும் வேகம் மட்டுப்பட்டது, மேற்கிந்தியத்தீவுகள் அணி கை ஓங்கத் தொடங்கியது.

ஆனால், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் கூட்டணி எந்தவிதமான அச்சமும், கூச்சமும் இல்லாமல் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு எளிதாக ரன்களைச் சேர்த்தனர். அதிலும் குறிப்பாக விஹாரி ஆடிய ஷாட்கள் தேர்ந்த பேட்ஸ்மேனைக் போல் அற்புதமாக அமைந்தது.

ரிஷப்பந்த் கடந்த டெஸ்ட் போட்டியில் சொதப்பினாலும் இந்த டெஸ்டில் பொறுப்புடன் ஆடி வருகிறார், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்து களத்தில் இருக்கிறார்கள்.

டாஸ்வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளத்தில் இருக்கும் புற்களைப் பயன்படுத்திக்கொண்ட ஹோல்டர், ரோச், கேப்ரியல் தொடக்க்தில் இருந்தே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர்.

ராகுல், அகர்வால் திறமையாக மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சை எதிர்கொண்டபோதிலும், ராகுல் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஹோல்டர் வீசிய 7-வது ஓவரில் மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி ஸ்விங் ஆன அபாரமான பந்து ராகுல் முயற்சியில்லாமலேயே எட்ஜைத் தட்டிச் சென்று முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த கார்ன்வாலிடம் பந்து தஞ்சமடைந்தது. 13 ரன்னில் ராகுல் வெளியேறினார்.

அடுத்து வந்த புஜராவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. சுழற்பந்துவீச்சை சிறப்பாக விளையாடக் கூடிய புஜாரா, திடீரென கார்ன்வால் பந்துவீச்சில் கட் ஷாட் அடிக்க முயன்று பாயிண்டில் புரூக்ஸிடம் கேட்ச் கொடுத்து 6ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டை கார்ன்வால் வீழ்த்தினார். பந்து கூடுதலாக எழும்பியதை புஜாரா கணிக்கவில்லை.

அரைசதம் அடித்த மயங்க் அகர்வால் ரன் சேர்க்க ஓடிய காட்சி : ப ட விளக்கம்

3-வது விக்கெட்டுக்கு அகர்வாலுடன் கோலி இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினார். விராட்கோலி சுழற்பந்துவீச்சை எளிதாக விளையாடக் கூடியவர் என்று கூறப்பட்டபோதிலும் கார்ன்வால் பந்துவீச்சுக்கு நேற்று மிகவும் திணறினார். ஆப்-ஸ்பின்னில் விராட் கோலி கணித்து விளையாட முடியாத அளவுக்கு பந்துகளை மாற்றி மாற்றி பிட்ச் செய்து தடுமாறவைத்தார்.

இதனால், விராட் கோலி 27 பந்துகளைச் சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் தன்னை நிலைப்படுத்திக்கொண்ட கோலி, தனது வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பி பவுண்டரிகளாக விளாசினார். சிறப்பாக ஆடிய அகர்வால் 115 பந்துகளைச் சந்தித்து அரைசதம் அடித்தார். கோலி 112 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இருவரும் நல்ல பாட்னர்ஷிப்பை நோக்கிச் சென்றபோது, அகர்வாலை 55 ரன்னில் வெளியேற்றினார் ஹோல்டர். ராகுலை ஆட்டமிழக்கச் செய்ததுபோன்று ஆப்-சைடு சற்று விலக்கி வீசப்பட்ட பந்தை தொட முயன்றார் அகர்வால், அந்த பந்து முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த கார்ன்வாலிடம் தஞ்சமடைந்தது.

அடுத்துவந்த ரஹானே இந்த முறை ஏமாற்றம் அளித்து 24 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஹேமில்டனிடம் கேட்ச் கொடுத்து ரஹானே வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு வந்த விஹாரி, கோலியுடன் சேர்ந்து அனாயசமாக ஆடினார்.

140 எடை கொண்ட சுழற்பந்துவீச்சாளர் கார்ன்வால் முதல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை பகிர்ந்த காட்சி

இருவரின் ஆட்டத்தால் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. விராட் கோலி 76 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஹேமில்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலி 55ரன்கள் சேர்த்திருந்தபோது, ரோச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கினார். ஆனால், அதற்கு நடுவர் அவுட் தரவில்லை, ஆனால் அப்பீல் செய்திருக்க வேண்டிய மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் டிஆர்எஸ் முடிவுக்குச் செல்லவில்லை. தொலைக்காட்சி ரீப்ளையில் அது தெளிவான அவுட் என்று தெரிந்தது இந்த வாய்ப்பை பயன்படுத்திய கோலி 76ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு வந்த ரிஷப் பந்த், விஹாரியுடன் சேர்ந்து பொறுப்புடன் பேட் செய்தார். புதிய பந்து எடுத்தபின்பும் இருவரும் பதற்றப்படாமல் ஷாட்களை அடித்ததால், ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. விஹாரி 80 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 42 ரன்களுடனும், ரிஷப் பந்த் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேற்கிந்தியத்தீவுகள் தீவுகள் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், கார்னவெல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

போத்தி ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x