கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் வசதி வாய்ப்புகளில் 10-20% கூட தடகள வீரர்களுக்குக் கிடைப்பதில்லை: சேவாக் வேதனை 

கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் வசதி வாய்ப்புகளில் 10-20% கூட தடகள வீரர்களுக்குக் கிடைப்பதில்லை: சேவாக் வேதனை 
Updated on
1 min read

மும்பை, பிடிஐ

பல விளையாட்டுகளும் பன்முகத் திறமையும் கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கிரிக்கெட்டை விட மிகப்பெரியது என்று விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

மும்பையில் புத்தக அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேவாக் 2 தடகள வீரர்களிடம் நேர்காணல் செய்தார், அப்போது, நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்குக் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.

“ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவை கிரிக்கெட்டை விட பெரிய நிகழ்வுகள் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. இந்த தடகள வீரர்களை இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைப்பேன். அதாவது இவர்களுக்கு நல்ல உணவு, ஊட்டச்சத்து, பயிற்றுநர்கள், உடற்கோப்பு மருத்துவர்கள் ஆகியவை தேவை என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு.

ஆனால் இவர்களை சந்தித்து இவர்களை அறியும் போதுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு என்னவெல்லாம் வசதிகள் கிடைக்கின்றன, ஆனால் அதில் 10%, 20% கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லையே என்பதை உணர்ந்தேன், இவர்கள் இதற்கு மேலும் தகுதியானவர்கள், ஏனெனில் இவர்கள் இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுட் தருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கையிலும் பயிற்சியாளர்கள் பெரிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் நாங்கள் பயிற்சியாளர்களுக்கு அதற்குரிய பெருமையை அளிக்க மாட்டோம், நாம் நம்முடனேயே வைத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் மற்ற விளையாட்டுகளில் பயிற்சியாளர்களைப் போற்றுகின்றனர், நாட்டுக்காக ஆடும்போது ஒருவேளை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களைப் பார்ப்பதில்லை, பேசுவதில்லை என்பதனால் அவர்களை மறந்தே விடுகின்றனர். ஆனால் மற்ற விளையாட்டுகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை பயிற்சியாளர்கள் இல்லையெனில் இவர்கள் இல்லை. , பயிற்சியாளர்களும் இவர்களுடன் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

இவ்வாறு கூறினார் சேவாக்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in