

2019-ம் ஆண்டு துலிப் டிராபியில் இந்தியா நீலம் அணிக்கு ஆடிவரும் ஜலஜ் சக்சேனா என்ற வீரர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியதில்லை, இந்திய அணியில் இடம்பெற்றதில்லை, ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு அரிய சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
32 வயதாகும் ஜலஜ் சக்சேனா முதல் தர கிரிக்கெட்டில் 6000 ரன்களையும் 300 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ‘டபுள்’ சாதனை நிகத்தியுள்ளார்.
இத்தகைய சாதனையைப் புரிந்த இந்திய வீரர்களில் இந்திய அணியில் இதுவரை ஆடாத ஒரே துரதிர்ஷ்டசாலி ஜலஜ் சக்சேனாதான்.
மற்ற வீரர்கள்: சிகே. நாயுடு, லாலா அமர்நாத், விஜய் ஹசாரே, வினுமன்கட், சந்து சர்வடே, பாலி உம்ரிகர், பாபு நட்கர்னி, சந்து போர்டே, எம்.எல். ஜெய்சிம்மா, சலீம் துரானி, எஸ்.வெங்கட்ராகவுன், சையத் அபிட் அலி, மதன்லால், கபில்தேவ், ரவிசாஸ்திரி, மனோஜ் பிரபாகர், சாய்ராஜ் பஹுதுலே, சஞ்சய் பாங்கர், ஆகிய வீரர்கள் அனைவரும் 6000 ரன் 300 விக்கெட் முதல் தர கிரிக்கெட் சாதனையை நிகழ்த்தியவர்கள் இந்திய அணிக்கு ஆடியவர்கள், ஆனால் ஜலஜ் சக்சேனாவுக்கு அந்த அதிர்ஷ்டம் இன்னும் வீட்டுக்கதவைத் தட்டவில்லை.
இந்தூரை சொந்த ஊராகக் கொண்ட ஜலஜ் சக்சேனா முதலில் ம.பி. அணியில் தன் கரியரைத் தொடங்கினார். பிறகு வாய்ப்புகளுக்காக கேரளாவுக்கு வந்தார். வலது கை ஆஃப் பிரேக் பவுலரான இவர் 113 போட்டிகளில் 6044 ரன்களையும் 305 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
“நான் 6000 ரன்கள் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியதை அறிவேன், ஆனால் இந்திய அணியில் ஆடாமலேயே இந்த மைல்கல்லை எட்டியவன் என்பது எனக்குத் தெரியாது. பாலி உம்ரீகர், லாலா அமர்நாத், கபில்தேவ் உள்ள பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த கவுரவம்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜலஜ் சக்சேனாவை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது, ஆனால் அங்கும் வாய்ப்பில்லாமல் போனது.
14 ஆண்டுகாலமாக அயராது ஆடிவரும் ஜலஜ் சக்சேனாவின் வீட்டுக் கதவை இன்னமும் இந்திய வாய்ப்பு தட்டவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. பங்கஜ் சிங் போன்றவர்கள், சக்சேனா, இன்னும் எத்தனையோ வீரர்கள் தங்கள் கனவை நினைவாக்க கிரிக்கெட்டே கதி என 10-14 ஆண்டுகள் ஆடுகின்றனர், ஆனால் வாய்ப்பு கிடைக்காமலேயே வெளியேறி விடுகின்றனர்.
-ஸ்போர்ட்ஸ்டார்