இந்திய  ‘ஸ்டார்’ பேட்ஸ்மென்களைக் கதறவிட்ட புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் ஓய்வு பெற்றார்

இந்திய  ‘ஸ்டார்’ பேட்ஸ்மென்களைக் கதறவிட்ட புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் ஓய்வு பெற்றார்
Updated on
2 min read

அசலான, உண்மையான புதிர் ஸ்பின்னர் என்றால் அது இலங்கையின் அஜந்தா மெண்டிஸ்தான், முதல் புதிர் ஸ்பின்னர் எனலாம். இவர் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கேரம் போர்டில் காய்களை அடிக்க நாம் விரலைச் சுண்டுவது போல் கிரிக்கெட் பந்தை சுண்டி வீசும் ‘கேரம் பால்’ என்பதைக் கண்டுபிடித்த அதிசய ஸ்பின்னர்தான் அஜந்தா மெண்டிஸ். இவரை விளையாட ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லஷ்மண், கங்குலி உள்ளிட்டோரே திணறித் திணறி ஆட்டமிழந்துள்ளனர். இந்திய அணியில் சேவாக் மட்டுமே இவரை ஒரு இன்னிங்ஸ் முழுதும் பதம்பார்த்து 200 நாட் அவுட் என்று முடித்தார், இவரால் சேவாகை வீழ்த்த முடியவில்லை என்பதே உண்மை.

இவர் 19 டெஸ்ட் போட்டிகளில் 70 விக்கெட்டுகளையும் 87 ஒருநாள் போட்டிகளி 152 விக்கெட்டுகளையும் 39 டி20யில் 66 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஏப்ரல் 2008-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்திய பேட்ஸ்மென்களைக் கதறவிட்ட அஜந்தா மெண்டிஸ்

அதன் பிறகு நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட்தான் அஜந்தா மெண்டிஸ் என்றாலே பேட்ஸ்மென்களுக்கு அஸ்தியில் ஜுரம் காணத் தொடங்கியதற்குக் காரணமாக அமைந்த்து. 4 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இவர் கராச்சியில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவைப் பந்தாடினார் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கதறவிட்டார். 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இலங்கை அணி 273 ரன்கள் குவிக்க இந்திய அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேவாக்தான் 36 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 60 ரன்களையும் தோனி 74 பந்துகளில் 49 ரன்களையும் எடுத்தனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 19 போட்டிகளீல் 50 விக்கெட் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்தச் சாதனை இன்னமும் இவரிடம்தான் உள்ளது. இவருக்கு முன்பாக அஜித் அகார்க்கர் 23 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் சாதனையை நிகழ்த்தினார்.

பிறகு அஜந்தா மெண்டிஸ் டெஸ்ட் போட்டிகளுக்கும் அழைக்கப்பட்டார். இவரும் முத்தையா முரளிதரனும் இந்திய அணியை நொறுக்கினர். இந்திய அணி டெஸ்ட் தொடரில் இலங்கையில் 1-2 என்று தோல்வி தழுவியது. அஜந்தா மெண்டிஸ் 3 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதில் அறிமுக டெஸ்ட்டிலேயே 8 விக்கெட்டுகள். இந்த டெஸ்டில் இந்திய அணி இலங்கையிடம் ஒரு இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி தழுவியது.

அதே போல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20யில் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலகசாதனையை தன் பக்கம் இன்னமும் வைத்திருக்கிறார். 2009, 2012 உலக டி20 தொடர்களில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற அஜந்தா மெண்டிஸ்டின் புதிர்பந்துவீச்சு பிரதானமான காரணமாக அமைந்தது.

டி20-யில் இருமுறை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரும் இவரே. அதில் இன்னொரு முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6/16 என்று அசத்தினார்.

நாளாக நாளாக இவரது புதிர்களை பேட்ஸ்மென்கள் விடுவிக்கெத் தொடங்க விக்கெட்டுகள் குறையத் தொடங்கின, காயங்களும் இவரைத் துரத்த இவர் தற்போது ஓய்வு பெற்றார்.

பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு பவுலர். வந்த வேகத்திலேயே சென்றிருந்தால் இன்றும் முரளிதரன் சாதனையை உடைக்கும் பவுலர் இவர்தான் என்ற நிலையில் இருந்திருப்பார். ஆனால் விளையாட்டில் ஏதோ ஒரு எக்ஸ்-ஃபாக்டர் என்பார்களே அதுதான் இவரது கிரிக்கெட்டின் புதிரையும் தீர்மானித்தது, அல்பாயுசில் இவரது கிரிக்கெட் வாழ்வு முடிவடைந்ததற்கும் அதே எக்ஸ்-ஃபேக்டர்தான் காரணமாகவும் அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in