

ரியோ டி ஜெனிரோ,
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எப்) உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
10 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீனியர் பிரிவில் ஏற்கெனவே அபூர்வி சண்டிலா, அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றிருந்த நிலையில் 3-வது வீராங்கனையாக இளவேனில் உயர்ந்துள்ளார்.
தமிழகத்தில் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இளவேனில் தற்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசித்து வருகிறார்.
தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இளவேனில் தங்கம் வென்ற நிலையில் சீனியர் பிரிவில் முதல் முறையாக இந்த ஆண்டு அறிமுகமாக தங்கம் வென்றார். இதுமட்டுமல்லாமல் உலக பல்கலைக்கழகங்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் இளவேனில் இந்த ஆண்டு வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவேனில் மொத்தம் 251.7 புள்ளிகள் பெற்று தங்கத்தை வென்றார். 2-வது இடத்தில் 250.6 புள்ளிகள் பெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த சியோநாய்ட் மெக்கின்டோஷ் வெள்ளி வென்றார்.
இதுவரை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் 10 மீ ரைபிள் பிரிவி்ல இந்திய மகளிர் 4 தங்கத்தில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சீன தைப்பே வீராங்கனை யிங் ஷின் லிங் வெண்கலப் பதக்கம் வென்று 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். அதுமட்டுமல்லாமல் இளவேனில் தனது சீனியர்களான அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டிலா இருவரையும் பின்னுக்குத் தள்ளி இந்த தங்கத்தை வென்றுள்ளார்.
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோட்கில், அபூர்வி ஆகியோர் இளவேனிலிடம் தவறவிட்டனர். இளவேனில் 629.4 புள்ளிகள் பெற்ற நிலையில், அஞ்சும் 629.1 புள்ளியும், அபூர்வி 627.7 புள்ளிகளும் மட்டுமே பெற்றனர்.
பிடிஐ