Published : 28 Aug 2019 03:44 PM
Last Updated : 28 Aug 2019 03:44 PM

இப்படி ஒரு கிரிக்கெட் வீரரா?- 7 ஆயிரம் விக்கெட்டுகள், 60 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை: 85 வயதில் வீரர் ஓய்வு 

லண்டன்,

60 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையோடு இணைந்து பயணித்து 7 ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்திய 85 வயது வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதியோடு, ஜமைக்காவைச் சேர்ந்த செஸில் ரைட் என்ற அந்த வீரர்தான் ஓய்வு பெற உள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளின் ஜமைக்காவைச் சேர்ந்த செஸில் ரைட் எனும் 85 கிரிக்கெட் காதலர்தான் 60 ஆண்டுகள் தன்னுடைய வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்தார். இதற்கு மேலும் தன்னால் வேகப்பந்துவீச்சு வீச முடியாது என்பதால், கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் விவியன் ரிச்சார்ட்ஸ், கேரி சோபர்ஸ், பிராங்க் வோரெல், வெஸ் ஹால் ஆகியோருடன் செஸில் ரைட் இணைந்து விளையாடிய அனுபவம் உடையவர்.

தொடக்கத்தில் பர்படாஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய செஸில் ரைட், மேற்கிந்தியத்தீவுகள் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், வெஸ் ஹால் ஆகியோருக்கு எதிராகப் பந்துவீசி மிரள வைத்துள்ளார்.

அதன்பின் கடந்த 1959-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு செஸில் ரைட் குடிபெயர்ந்தார். அங்கு சென்ட்ரல் லான்செஸர் லீக்கில் கிராம்ப்டன் அணிக்காக ரைட் விளையாடினார். அதன்பின் இங்கிலாந்திலேயே நிரந்தரமாக செஸில் ரைட் தங்கினார்.

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் எனக் கருதப்படும் ஜோல் கார்னர், சோபர்ஸ், ஹால் ஆகியோருடன் விளையாடிய அனுபவம் கொண்டவர் ரைட் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 60ஆண்டுகளாக கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ரைட் மிகுந்த உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் களத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இதுவரை 7 ஆயிரம் விக்கெட்டுகளை செஸில் ரைட் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 5 சீசன்களில் விளையாடிய ரைட் 538 விக்கெட்டுகளை கைப்பற்றி மலைக்க வைக்கும் சாதனையைச் செய்துள்ளார்.

அதாவது இவரின் பந்துவீச்சு சராசரி என்பது ஒவ்வொரு 27 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் என்பதாக இருந்துள்ளது.

தற்போது 85 வயதாகிவிட்டதால், செஸில் ரைட்டால் வேகப்பந்துவீச்சு முன்பு இருந்த அளவுக்கு வீச முடியவில்லை என்பதால், கிரிக்கெட் விளையாட்டுடான தனது பயணத்தில் இருந்து விடைப் பெற உள்ளார். .

லண்டனில் வெளியாகும் டெய்லிமெயில் நாளேட்டுக்கு ரைட் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், " இன்னும் நீண்டநாட்கள் விளையாட வேண்டும் என விரும்பினேன். ஆனால் எனக்குத் தெரியும் என்னால் விளையாட முடியாது. என் உடல் அதற்காக ஒத்துழைக்காது.

நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் எனது உடலை நான் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடனும் வைத்திருந்தேன். எனது பயிற்சியை நான் ஒருபோதும் மறந்தது இல்லை. ஒருபோதும் வீட்டில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை விரும்பமாட்டேன்.

தற்போதும் நான் ஓல்ட்ஹாம் அணிக்காக விளையாடி வருகிறேன். வரும் செப்டம்பர் 7-ம் தேதி பென்னிலீக் போட்டியில் ஸ்பிரிங்ஹெட் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் நான் ஓய்வு பெற இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x